அந்த ஒரு போட்டியில் இருந்து தான் அசிங்கப்பட துவங்கினோம்; புலம்பும் தோனி !!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய இரண்டாவது போட்டியில் இருந்தே சென்னை அணி சரியாக விளையாடவில்லை என தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் டி.20 தொடரின் கில்லியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட தொடரில் மிக மிக மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறியுள்ளது.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளாகியிருக்கும் நிலையில், சென்னை அணியின் தொடர் தோல்விகள் குறித்து பேசிய தோனி, இரண்டாவது போட்டியில் இருந்தே எதுவும் சரியாக நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தோனி பேசுகையில், “இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம். முதல் போட்டியில் வெற்றி பெற்ற நாங்கள் இரண்டாவது போட்டியில் இருந்து மோசமாக விளையாடினோம், எல்லாம் தவறான பாதையில் சென்று விட்டது. மைதானங்களும் சூழ்நிலைகளும் சாதகமாக இல்லாத நிலையில், சிறிது அதிர்ஷ்டமும் தேவைப்படும் ஆனால் அதுவும் எங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கவில்லை” என்றார்.

அதே போல் (நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்’’ என பேசிமுடித்தார்.

Mohamed:

This website uses cookies.