39-வது பிறந்த நாளுக்கு முன்பு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 22 அன்று ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் தோனியால் வாக்கு செலுத்த முடியாமல் போனது. காரணம், அவர் கெளரவ உறுப்பினராக மட்டும் இருந்ததுதான்.
தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆனபிறகு, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் சஹே தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைப்படி, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர், வீராங்கனைகள் ஆயுட்கால உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார்கள். வருண் ஆரோன், செளரப் திவாரி, ஷபாஸ் ஆகியோர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளார்கள்.
ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தில் 645-வது ஆயுட்கால உறுப்பினராக தோனி உள்ளார். இதன்மூலம் கிரிக்கெட் சங்கத்தின் அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தோனியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வரும் ஜூலை 7ம் தேதி தனது 39வது அகவையில் அடியெடுத்து வைக்க இருக்கு தோனிக்கு இப்போதே வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல தரமான காணொளிகளும் உருவாகி வருகின்றது.