கிரிக்கெட் உலகில் தோனி ஒரு யோகி போன்றவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்.
இந்திய அணிக்கு தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக மூன்றுவித ஐசிசி கோப்பைகளையும் பெற்றுத் தந்திருக்கிறார். இந்த சாதனையைச் செய்த ஒரே கேப்டன் இவர்தான்.
மேலும் டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை முதல் முறையாக முதல் இடத்திற்கு எடுத்துச் சென்றார். இத்தகைய பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருந்தார். பிறகு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவரது பெயர் நீக்கப்பட்டது.
இதனால் இந்திய அணிக்கு தோனி மீண்டும் திரும்புவது கடினம் என்ற சூழல் நிலவியது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு முடிவை அறிவித்தார். இந்திய அணிக்காக பல மகத்தான சாதனைகளை செய்த இவருக்கு மரியாதை நிமித்தமாக ஒரு இறுதிப் போட்டி நடைபெறவில்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தனர்.
இருப்பினும், தோனி செய்த இத்தகைய சாதனைகளை பாராட்டியும், அவரது இந்த முடிவிற்கு பிறகு வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமெனவும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், தோனி கிரிக்கெட் உலகில் எப்படிப்பட்டவர் அவரது மனநிலை எத்தகையது என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இவர் கூறுகையில்,
“கிரிக்கெட் உலகில் தோனி ஒரு யோகியை போன்றவர். ஆட்டத்தின் போக்கை நன்கு கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படக் கூடியவர். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் அதிலிருந்து தள்ளியே நிற்பார். கோப்பையை வென்றாலும் அதை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு அதற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதது போல ஒரு ஓரமாக நின்று விடுவார். தலைக்கனம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத இந்திய அணியில் ஒரே கேப்டன் இவர்தான்.” என புகழ்ந்து தள்ளினார்.