சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்னு வந்துட்டா இவருதான் எல்லாமே – முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன சீக்ரெட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் தான் எல்லாமே… இவர்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு என மனம்திறந்து பேசியுள்ளார் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாம் பில்லிங்ஸ்.
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் பில்லிங்ஸ். 2018 ஆண்டு ஐபிஎல் தொடர் பில்லிங்ஸ்க்கு நன்றாகவே அமைந்தது. மூன்று முக்கிய போட்டிகளில் இறுதி வரை நிலைத்து ஆடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
ஆனால் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு எதிர்பார்த்தது போல அமையவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமேகளமிறக்கப்பட்டார். இறுதியாக 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை அணி அவரை தக்கவைக்கவில்லை. ஏலத்தில் விடப்பட்டார்.
இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றது குறித்தும் இரண்டு ஆண்டுகளில் பெற்ற அனுபவம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் சாம் பில்லிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய அனுபவம் அணியில் ஏற்பட்ட பல நினைவுகள் குறித்து பேசிய சாம் பில்லிங்ஸ் கூறுகையில், “சென்னை அணிக்காக ஆடிய இரண்டு வருடங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. இத்தகைய வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ அணி நிர்வாகம் வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தும் சூழல் தான் காரணம். தொடர்ச்சியாக அவர்கள் செய்துவரும் பயிற்சியும் பெரிதாக உலகத்தரம் வாய்ந்த பயிற்சி என்றே கூறவேண்டும் இதுவும் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமமான அளவில் செயல்படும் ஒரே அணி என்றால் அது மும்பை அணியாக மட்டுமே இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
சென்னைக்காக ஆடிய முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்று மெடல் வாங்குகையில் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது. சென்னையை பொருத்தவரை, வெளிநாட்டு வீரர்களாக பார்க்க மாட்டார்கள். உள்ளூர் வீரர்களைப் போலவே நம்மை நடத்துவார்கள். முதல்முறை பழகுவது போன்றே இல்லை மிகவும் பரிச்சயமான ஒரு அணியாகவும் எனக்கு இருந்தது.
என்னை பொருத்தவரை, மிகப்பெரிய வீரர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவம் அளப்பரியது. அதை நான் சென்னை அணியில் இருக்கையில் தெரிந்துகொண்டேன். குறிப்பாக தோனி போன்ற வீரர்களுடன் இங்கே கிடைக்கும் அனுபவம் மிகப் பெரியது. கற்றுத் தருவதைப் பொருத்தவரை தோனியை விட எவரும் சிறந்தவராக இருக்க இயலாது. நுண்ணிய மூளைக்காரர். அதேபோல் வீரர்களுக்கு சிறந்த சுற்றுச் சூழலை அமைத்துக் கொடுப்பதில் கைதேர்ந்தவர்.” என்றார்.