சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த வருடமும் டாடி ஆர்மி தான். இது அவர்களுக்கு சாதகமாக அமையுமா? இல்லை, பாதகமாக அமையுமா? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்தியூ ஹைடன் பேட்டி அளித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இருந்துவரும் சிஎஸ்கே, இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றிருக்கிறது. இதுவரை 14 சீசன்களில் விளையாடி அதில் 10 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது. 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கும் சென்றுள்ளது.
இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க சிஎஸ்கே அணிக்கு கடந்த சில வருடங்களாகவே அதிக அனுபவம்மிக்க, வயதுமிக்க வீரர்களே எடுக்கப்பட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணியின் இந்த திட்டம் வெற்றிகரமாகவும் இருந்திருக்கிறது.
சிஎஸ்கே அணி வீரர்களின் வயது சராசரியாக 32-33 வயதுமிக்கதாக இருப்பதால் இந்த அணிக்கு டாடி ஆர்மி என்ற பெயரும் உண்டு. துடிப்பான இளம் வீரர்களை கொண்டு விளையாடும் டி20 போட்டியில் இப்படிப்பட்ட அதிக வயதுமிக்க வீரர்களை வைத்திருப்பது சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருந்தாலும், இந்த வருடம் எப்படி இருக்கும் என்று விமர்சித்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்தியூ ஹைடன்.
“கடந்த சில வருடங்களைப் போல இந்த வருடமும் சிஎஸ்கே, அதிக வயதானவர்களை அணியில் கொண்டிருக்கிறது. தோனி(41), அம்பத்தி ராயுடு(37) ஆகியோர் அணியில் மிகவும் வயது மிக்கவர்கள் மற்றும் அணியின் மிகமுக்கிய வீரர்களாக இருக்கின்றனர். அவர்களது திறமை மற்றும் தலைமை பண்பு இரண்டும் அணிக்கு தொடர்ந்து முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனால் இந்த வருடம் வீரர்கள் அதிக அளவில் காயமடைகின்றனர். மேலும் இந்த டி20 தொடர் மிகவும் இளமையான வீரர்களுக்கான போட்டியாக மாறியுள்ளது. இவர்களது அனுபவம் கைகொடுத்தாலும், வேகமாக செயல்படும் விதம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த வருடம் அது சாதகமாக இருக்குமா? அல்லது சிஎஸ்கே அணிக்கு சரிவை கொடுக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவர்கள் சறுக்கும்பொழுது வயது தான் காரணமாக கூறப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.” என்று கூறினார்.
சிஎஸ்கே அணி இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஐபிஎல் துவக்க நாளான மார்ச் 31ம் தேதி நடைபெறுகிறது.