கப் ஜெயிச்சுட்டா நீங்க பெரிய கேப்டனா? இந்தியாவுக்கு இவரு மட்டும் தான் பெஸ்ட் கேப்டன் – முன்னாள் வீரர் சொன்ன ஷாக் பதில்!
இந்திய அணியின் தோனி, கபில் தேவ் கோப்பைகளை பெற்றுத்தந்தாலும் இவர் ஒருவர் மட்டுமே சிறந்த கேப்டன் என பேட்டியளித்துள்ளார் முன்னாள் வீரர் மனீந்தர் சிங்.
இந்திய கிரிக்கெட் அணி பல தலைசிறந்த கேப்டன்களை கண்டிருக்கிறது. அதில் குறிப்பாக கபில் தேவ் மற்றும் தோனி இருவரும் இன்றியமையாதவர்கள் ஆவர். அவர்கள் இருவரும் 1983 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் முறையே இந்தியாவிற்காக உலகக்கோப்பையை தங்களது தலைமையில் பெற்றுத் தந்திருக்கின்றனர்.
அப்படியிருக்க, இவர்கள் இருவரை விட இந்திய அணியின் சிறந்த கேப்டன் கங்குலி என பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் மனீந்தர் சிங். அவர் கூறுகையில், “தோனி அதிர்ஷ்டக்காரர். தோனிக்கு முன்னதாக கபில்தேவ் இந்தியாவிற்காக உலக கோப்பையை பெற்றுத் தந்து இந்தியாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என காட்டிவிட்டார். அதேபோல் கங்குலி இந்திய அணியால் எந்தவொரு மைதானத்திலும் வெற்றி பெற முடியும் என்பதையும் காட்டி விட்டதால் இரண்டையும் எடுத்துக் கொண்ட தோனி சரியாக பயன்படுத்தி அனைத்துவித கோப்பைகளையும் பெற்றுத் தந்துவிட்டார்.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முற்றிலும் மாறுபட்டது. அவரது அணியின் மத்தியில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை எவருக்கும் இல்லை. ஆனால் தோனியை போலவே நேர்மறையான சிந்தனை, அமைதி மற்றும் நோக்கம் என அனைத்தும் சரியாக இருந்தது. அதனால் தோனி மற்றும் கபில்தேவ் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நான் பார்க்கிறேன்.
இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் கங்குலி. இந்திய அணிக்கு கிடைத்த தலைசிறந்த கேப்டனாக அவரை நான் நினைக்கிறேன். இளம் வீரர்கள் பலரை வைத்துக் கொண்டு வெளி நாடுகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அணிக்காக வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார். யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற இளம் வீரர்களை ஜாம்பவான்கள் அளவிற்கு உயர்த்தியதில் கங்குலிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.” என்றார் மணீந்தர் சிங்.
மணீந்தர் சிங் இந்தியாவிர்க்காக 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அதேபோல் 49 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கும் மணீந்தர் 1982 முதல் 1993 வரை ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடியது குறிப்பிடத்தக்கது.