தோனி இல்லை என்றால் விராட் கோஹ்லி என்ற கேப்டனே இல்லை; முன்னாள் ஜாம்பவான் ஓபன் டாக்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஏன் பெஞ்சில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களும் தனக்கு மே.இ.தீவுகளின் 1980, 1990களின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார் பிரையன் லாரா.
மும்பையில் சாலைப்பாதுகாப்பு லெஜண்ட்ஸ் டி20 தொடரில் பங்கேற்க வந்துள்ள பிரையன் லாரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
விராட் கோலி இப்போது சிறந்த கேப்டனாக விளங்குகிறார். அவரது ஆட்டத்தின் மூலம் ஓர் உதாரணமாக அணிக்குத் திகழ்கிறார்.அதாவது பேட்டிங் மட்டுமல்ல ஆட்டத்தின் அனைத்து புலங்களிலும்தான், களத்துக்கு வெளியேயும்தான். இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்த தோனியின் பட்டறையிலிருந்து அவர் சிறப்பாக வழிநடத்துகிறார். வித்தியாசமாக சிந்திக்கிறார். இந்திய கிரிக்கெட் நாம் அனைவருக்கும் தெரிந்தது போலவே சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
1970, 80களில் மே.இ.தீவுகள், 1990களில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது போல் கிரிக்கெட் உலகை இந்தியா ஆட்சி செலுத்தும். கிரிக்கெட்டில் இந்தியா தற்போது முன்னணி நாடாகத் திகழ்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பும்ரா பந்து வீச்சைப் பார்த்தேன். எங்கிருந்து வருகிறது இந்த பந்து வீச்சு என்று ஆச்சரியமடைந்தேன். நான் கடந்த காலத்தில் பார்த்த பவுலிங் போல் இருக்கிறது அது. 1990களில் பார்த்த அட்டாக் போல் உள்ளது, ஆனால் பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமாக உள்ளது.
ரோஹித் சர்மா ஒரு அபாரமான வீரர். குறைந்த ஓவர்கள் போட்டியில் ரோஹித் நன்றாக ஆடும்போது டெஸ்ட் போட்டிகளிலும் ஏன் முடியாது? அவருக்குள்ள திறமையை வைத்துப் பார்க்கும் போது அவரை அப்படி ஒதுக்கக் கூடாது என்று புரிகிறது.அவர் ஒரு ஆட்டக்காரர், நிச்சயம் வெற்றியடைவார் என்றார்.