தோனிய இனியாச்சு தொந்தரவு செய்யாதீங்க; சுனில் கவாஸ்கர் சொல்கிறார்
தோனியால் இனி இளைஞராக மாற முடியாது அவர் மீது அதிக நெருக்கடியை கொடுக்க வேண்டாம் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அடிலெய்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 299 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கோலியும், தோனியும் வெற்றிக்கு வித்திட்டனர். இருவரும் 82 ரன்கள் கூட்டாகச் சேர்த்தனர்.
நீண்ட காலமாக தோனியின் பினிஷிங் ஆட்டத்தைக் காணமுடியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமைந்தது. அரைசதம் அடித்த தோனி கடைசி ஒரு சிக்ஸர் அடித்து அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
தோனியின் ஆட்டம் குறித்தும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்தும் சுனில் கவாஸ்கர் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
தோனி நாளுக்கு நாள் இளைமையாக மாறிக் கொண்டிருக்கவில்லை என்பதை அவரை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொண்டு பொறுமை காக்க வேண்டும்.
பந்துவீச்சாளர் ஒவ்வொரு பந்துவீசும் போதும் தோனி அவரிடம் சென்று பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார், எப்படி பந்துவீச வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை கூறுகிறார். பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் தோனிக்கு இருக்கிறது. பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார், எப்படி ஷாட்களை ஆடப்போகிறார் என்பதைக் கணிக்கும் திறன் யாருக்கும்அமைந்துவிடாது, அது தோனிக்கு இருக்கிறது. அதனால், பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறார், பீல்டர்களையும் சரியான இடத்தில் நிறுத்துகிறார்
பேட்ஸ்மேன் அடுத்து என்ன ஷாட் அடிக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றார்போல் பீல்டிங்கை மாற்றி அமைக்க உதவுகிறார். பேட்ஸ்மேன் சிங்கிள் ரன் அடிக்கப்போகிறாரா அல்லது பவுண்டரி. சிக்ஸருக்கு முயற்சிப்பாரா என்பதை தோனி அறிந்து பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறார்.
கடைசி நேரத்தில் விராட் கோலிக்கு பல்வேறு ஆலோசனை தருவதன் மூலம் தோனிக்கு அவரின் நெருக்கடியைக் குறைக்கிறார். ஆதலால், தோனியிடம் ஆலோசனை கேட்காமல் விராட் கோலியால் பீல்டிங்கை மாற்றியமைப்பது என்பது இயலாத காரியம். தோனி மீது விராட் கோலி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதால் அவருக்காக அவ்வப்போது சில சலுகைகளையும் வழங்குகிறார்.
ஆதலால், அடுத்துவரும் காலங்களில் தோனி அதிகமான போட்டிகளில் விளையாட உள்ளதால், உலகக்கோப்பைக்கு முன்பாக தோனி ஃபார்முக்கு திரும்பிவிடுவார். உலகக்கோப்பை தொடங்கும் முன் தோனிக்கு 10 நாட்கள் இடைவெளி அளிக்க வேண்டும். அவருக்கு மட்டுமல்ல, ஷிகர் தவண், ராயுடு ஆகியோருக்கும் ஓய்வு அளிக்க வேண்டும்” என்றார்.