இந்திய அணியில் ரிஷப் பண்ட்டிற்கு இடம் கிடைக்குமா..? ராகுல் டிராவிட் கணிப்பு
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாளர்கள் விரும்பினால் இரண்டு விக்கெட் கீப்பர்கள் விளையாட முடியும் என முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் ஏறக்குறைய வீரர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளார்கள். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் விக்கெட் கீப்பராக செயல்படப்போவது டோனியா? அல்லது ரிஷப் பந்தா? என்பதில் பெரிய விவாதமே நடந்தது. டோனிதான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ தேர்வுக்குழு தெளிவாக கூறிவிட்டது.
இதனால் ரிஷப் பந்த் 2-வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவாரா? அல்லது பேட்ஸ்மேன் தரவரிசையில் சேர்க்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து இளையோர் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நான் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதால், எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து கருத்து சொல்லக்கூடாது.
ஒவ்வொரு வீரர்களும் எனக்கு சமமானவர்கள்தான். டோனி வியக்கத்தக்க அனுபவம் கொண்டவர். கடந்த சில மாதங்களாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரிஷப் பந்த் உண்மையிலேயே உற்சாகமிக்க இளம் வீரர். சிறந்த திறமையையும் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பையில் தேர்வாளர்கள் விரும்பினால் இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் விளையாட முடியும். சிறப்பான 15 வீரர்களை கொண்ட அணியாக இருக்க வேண்டும்.
இந்திய அணியில் 4-வது இடத்திற்கு இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் கூற இயலாது. நான் 10 வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். அனைவரும் அந்த இடத்திற்காக போட்டியிடுவார்கள். அதனால் பொது இடத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரை தேர்வு செய்ய இயலாது’’ என்றார்.