சுஷாந்த் மரணம் குறித்து தோனியின் மவுனத்திற்கு காரணம் இதுதான்! தோனியிடம் பேசிய நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்
சுஷாந்த் மரணம் குறித்து தோனி ஏன் மவுனமாக இருக்கிறார் என்ற கேள்விகளுக்கு, தோனியிடம் பேசிய அவரது நெருங்கிய நண்பர் காரணத்தை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகரும் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஞாயிறு ஆண்டு யாரும் எதிர்பாராதவகையில் தற்கொலை செய்து கொண்டார்.
34 வயதே ஆன சுஷாந்த், திடீரென தற்கொலை செய்துகொண்டதால் திரையுலகம் மட்டுமல்லாது கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியில் உள்ளது. இவரது தற்கொலைக்கு மனஅழுத்தம் காரணம் என தற்போதுவரை கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம், புகழ், சமூக மதிப்பு என அனைத்திலும் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த சுஷாந்தின் தற்கொலை பாலிவுட் மீது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் உலகிலும் பலருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, பாலிவுட் தன்னை அவர்களது குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏற்க மறுக்கிறது என்ற மன அழுத்தமே அவரது தற்கொலைக்கு காரணம் என்றே செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், சுஷாந்த் மற்றும் தோனி இருவருக்குமான நெருக்கம் அனைவரும் அறிந்ததே, எம்.எஸ்.தோனி படத்துக்காக இருவரும் நீண்டகாலம் ஒன்றாக பயணித்துள்ளனர். இந்நிலையில், சுஷாந்த் மரணத்திற்கு தோனி ஏன் மவுனமாக இருக்கிறார் என்கிற கேள்விகள் ரசிகர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது.
இதற்க்கு எம்.எஸ். தோனி திரைப்படத்தின் இயக்குனர் பதிலளித்துள்ளார். இயக்குனர் நீரஜ் பாண்டே பேசுகையில், “தோனியை தொலைபேசி மூலம் அழைத்து, சுஷாந்த் மரணம் குறித்து தெரிவித்தேன். தோனிக்கு மட்டுமின்றி அவரது நெருங்கிய நண்பர்கள் மிஹிர் திவாகர், அருண் பாண்டே ஆகியோருக்கு தகவல் பகிர்ந்தேன். தோனி, இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நொறுங்கினார்.” என்றார்.
இதுகுறித்து தோனியின் நண்பர் அருண் பேசுகையில், “செய்தியை கேட்டபின் தோனி மனமுடைந்து மிகவும் கவலையுடன் காணப்படுகிறார். இது குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு போன்றது. சுஷாந்திற்கு என்ன நேர்ந்திருக்கும் என எங்களால் இப்போதுகூட நம்ப முடியவில்லை. எனது வருத்தத்தை வெளிப்படுத்தும் நிலையில் நான் இல்லை.” என்றார்.