கேப்டனாக நான் கற்றுக்கொண்டது இதை தான்; தோனி ஓபன் டாக்
கேப்டனாக தான் கற்றுக்கொண்ட அனுபவங்களை முன்னாள் கேப்டன் தோனி பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர் தோனி. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனி, டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணியை முதலிடத்திற்கு இட்டுச் சென்றார்.
இந்திய அணியில் பெரும்பங்காற்றியது மட்டுமல்லாமல், ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, அந்த அணிக்கு மூன்றுமுறை கோப்பையை வென்றுகொடுத்துள்ளார்.
நெருக்கடியான சூழலிலும், டென்ஷனாகாமல் நிதானமாக வீரர்களை திறம்பட கையாண்டு, வெற்றியை பறிப்பதில் வல்லவர் தோனி. அதனால்தான் கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஒரு கேப்டனாக அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய தோனி, காமன் சென்ஸ் என்ற ஒரு விஷயமே இல்லை. சில நேரங்களில் இதெல்லாம் ஒரு விஷயமா? இதையெல்லாமா வீரர்களிடம் சொல்ல வேண்டும்? என தோன்றும். ஆனால் ஒரு அணியாக இருக்கும்போது அனைத்து வீரர்களின் புரிதலுக்காக சில சாதாரண விஷயங்களை கூட சொல்லித்தான் ஆக வேண்டும். நான் கூறும் அந்த குறிப்பிட்ட விஷயத்தை ஏற்கனவே புரிந்துகொண்ட வீரர்கள் இருப்பார்கள். அவர்கள், இதையெல்லாம் ஒரு விஷயமாக ஏன் சொல்ல வேண்டும்? என நினைக்கலாம். ஆனால் அதை தெரியாதவர்களுக்கும் தெரியவைக்க வேண்டும் என்பதால் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதை ஒரு கேப்டனாக கற்றுக்கொண்டேன்.
அதேபோல், வீரர்களுடன் நேரம் செலவிட்டு பேசி, அவர்களை பற்றி தெரிந்துவைத்திருக்க வேண்டும். அப்போது தான் தேவையான நேரத்தில் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க முடியும். குறிப்பிட்ட வீரரை பற்றி தெரியாமல் அவருக்கு ஆலோசனைகளை கூற முடியாது என தோனி தெரிவித்தார்.