கிரெக் சாப்பல் பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதில் ஒருவர்தான் இந்த ஆந்திரா வீரர் வேணுகோபால் ராவ்.
ஆந்திராவில் உள்ள சிறிய ஊரான காஜுவாக்காவிலிருந்து வந்த வேணுகோபால் ராவ் ஐபிஎல் அணி டெக்கான் சார்ஜர்ஸுக்கு ஆடியவர். முதல் தர கிரிக்கெட்டில் 7000+ ரன்களையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4,000+ ரன்களையும் எடுத்தவர்.
இவர் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அளித்த பேட்டியில் தோனி போல் சிறிய ஊர்களிலிருந்து வருபவர்கள் எப்படி தோனியிடமிருந்து உத்வேகம் பெற்றனர் என்பதையும் தோனியுடன் ஓய்வறையைப் பகிர்ந்து கொண்ட சக வீரர் என்ற முறையில் தோனி ஏன் இன்னமும் ஆட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
“ஆம் தோனி போல் சிறிய ஊர்களிலிருந்து நான், புவனேஷ்வர் குமார், பிரவீன் குமார், சுரேஷ் ரெய்னா, இந்தியாவுக்காக ஆடியுள்ளோம், நான் நகரங்களைக் கூறவில்லை சிறு ஊர்களிலிருந்து இந்தியாவுக்காக ஆடும் அளவுக்கு உயர்ந்தவர்களைப்பற்றிக் கூறுகிறேன்.
இந்தியா ஏ அணிக்காக தோனி நான் மற்றும் சில வீரர்கள் செல்லும் போது தோனி கூறுவார் மனரீதியான கவனமே முக்கியம் என்பார் அனைத்திற்கும் மேலாக நாம் இந்திய அணிக்காக ஆடுவோம் என்ற மன உறுதி முக்கியம் என்பார். மனரீதியாக அவர்கள் தயாராகவே இருக்கின்றனர், அன்று தோனி மூலம் ஊக்கம் பெற்றவர்கள் எத்தனையோ பேர். இப்போது நவ்தீப் சைனி கர்னூல்காரர், சாஹல் ஜிந்த் என்ற சிறிய ஊரிலிருந்து வந்து இந்தியாவுக்கு ஆடுபவர்கள்தான்.
டி20 உலகக்கோப்பையில் தோனி ஆட வேண்டும் அதே போல் 2023-ல் 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் அதிலும் தோனி ஆட வேண்டும், ஐசிசி தொடர்களுக்கு அவர் மதிப்பு மிக்க வீரர். அவரால் மீண்டும் வர முடியாது என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனெனில் அதுதான் தோனி. ஏனெனில் அவர் தோனி” என்றார் வேணுகோபால் ராவ்.