சென்னை அணிக்கு அதன் ஆரம்ப ஐபில் தொடர் முதல் இன்று வரை ஒரே கேப்டனாக மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வருகிறார். அவரது தலைமையில் சென்னை மிக சிறப்பாக விளையாடி வருவது நம் அனைவருக்கும் தெரியும். 11 வருடங்களில் 10 வருடங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி, மூன்று முறை கோப்பையையும், மேலும் ஐந்து முறை ரன்னர் அப் அணியாகவும் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னை அணியின் இளம் வீரர் ருத்ராஜ் மகேந்திர சிங் தோனி சில சமயங்களில் டு பிளசிஸ் இடம் அறிவுரைகளை கேட்டுக் கொள்வார் என்று கூறியிருக்கிறார்.
அவர்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்
இது பற்றி கூறியுள்ள ருத்ராஜ், மகேந்திர சிங் தோனி மற்றும் டு பிளசிஸ் ஆகிய இருவரும் மிகவும் அமைதியான ஒரு வீரர்கள். ஆட்டத்தில் எப்பொழுது என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஸ்மார்ட் கிரிக்கெட் வீரர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வீரர்களுக்கு மரியாதை கொடுக்கும் விஷயத்திலும் சரி, சக வீரர்களிடம் பழகும் விஷயத்திலும் சரி இவர்களிருவரும் ஒற்றுப் போனவர்கள். எனவே இவர்கள் இருவரும் இணைந்து பல நேரங்களில் அணி பற்றிப் பேசிக் கொண்டே இருப்பார்கள். போட்டி நடப்பதற்கு முன்னரும் சரி பின்னரும் சரி இவர்கள் இருவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்து ஒரு சில சமயங்களில் 2-3 மணிநேரங்கள் கூட பேசுவார்கள்.
மேலும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சில நேரங்களில் டு பிளசிஸ் வந்து மகேந்திர சிங் தோனி இடம் தனது அறிவுரையை கூறுவார் அதை பெருந்தன்மையோடு மகேந்திர சிங் தோனி ஏற்றுக் கொள்வார் என்றும் ருத்ராஜ் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் டு பிளசிஸ்
நடந்து முடிந்துள்ள 7 ஆட்டங்களில் டு பிளசிஸ் 320 ரன்கள் குவித்திருக்கிறார். அதேசமயம் மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது, சென்னை அணி மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும் மிக சிறப்பாகவே விளையாடும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.