2023 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியே நீடிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2008 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகர கேப்டனாக வலம் வந்த மகேந்திர சிங் தோனி 2023 ஐபிஎல் தொடரில் சென்னையின் கேப்டனாக நீடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்து வந்தது.
சென்னை அணிக்கு இதுவரை நாலு முறை டைட்டில் பட்டதை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி, 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்து ரவீந்திர ஜடேஜாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இதனால் இந்தத் தொடரோடு தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரவீந்திர ஜடேஜாவால் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திறம்பட வழி நடத்த முடியவில்லை என்பதால், மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனியே பொறுப்பேற்றார். ஆனால் இந்த கேப்டன் பதவி எத்தனை காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாமல் ஒரு புதிராகவே இருந்தது.
குறிப்பாக ஒரு பேட்டியில் 2023 ஐபிஎல் தொடரில் நான் சென்னை அணியில் நிச்சயம் இருப்பேன், ஆனால் அது கேப்டனாகவா அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா என்று தெரியவில்லை என்று தோனி தெரிவித்திருந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியை யார் வழி நடத்த போகிறார் என்ற குழப்பம் அனைவரும் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் திருவாரூரில் நடைபெற்ற கிரிக்கெட் அசோசியேசன் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், செய்தியாளர்களை சந்தித்து 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக தோனியை நீடிப்பார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்.இந்த செய்தி சென்னை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வேறு ஒரு தரமான வீரரை சென்னை அணியின் கேப்டனாக பயிற்றுவிப்பதற்காகவும் இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.