ஐ.பி.எல் தொடரின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த முன்னாள் வீரர்; கேப்டன் யார் தெரியுமா..?
ஐபிஎல்லில் ஆல்டைம் பெஸ்ட் லெவன் வீரர்களை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
கொரொனா அச்சுறுத்தல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்டது. 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா சமூக தொற்றாக மாறுவதை தடுக்க, ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதம் தொடங்குவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்குவதாக இருந்த ஐபிஎல் 13வது சீசன் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான்.
மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகின்றனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், முதல் தர கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட சீனியர் வீரருமான வாசிம் ஜாஃபர், ஐபிஎல்லில் ஆல்டைம் பெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஐபிஎல் அணியின் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் இந்திய அணியின் தொடக்க வீரரும் நான்கு முறை ஐபிஎல் டைட்டிலை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
மூன்றாம் வரிசையில் சுரேஷ் ரெய்னாவையும் நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ள வாசிம் ஜாஃபர், ஐந்தாம் வரிசை வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் தோனியை தேர்வு செய்துள்ளார். சிஎஸ்கே அணியை 8 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு அழைத்து சென்றதுடன், 3 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனான தோனியைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.
அதிரடி ஆல்ரவுண்டர்களாக ஆண்ட்ரே ரசல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த அணியில் ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் முக்கியமானவரான டிவில்லியர்ஸுக்கு அணியில் இடமில்லை.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் ஐபிஎல் அணி:
கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், அஷ்வின், பும்ரா, மலிங்கா.