தோனியை மீண்டும் புறக்கணிக்கும் பி.சி.சி.ஐ..? முடிவுக்கு வரும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை
தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடரிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் பெயர் இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளம்வீரர் ரிஷப் பந்த், எதிர்கால வீரர்கள் சஞ்சு சாம்ஸன், இஷான் கிஷான் ஆகியோரின் பெயர்கள் அதிகமாக தேர்வுக்குழுவினர்கள் ஆலோசிப்பார்கள். ரிஷப்பந்த்க்கு மாற்றாக, மற்றொரு விக்கெட் கீப்பர்களாக சாம்ஸன் மற்றும் இஷான் கிஷன் பெயர் பரீசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவுக்கு வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் 15-ம் தேதி தரம்சலா, 18-ம் தேதி மொஹாலி, 22-ம் தேதி பெங்களூரு ஆகிய இடங்களில் 3 டி20 போட்டித் தொடரில் இந்திய அணியுடன் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 4-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி வென்றது. அந்த தொடரில் இடம் பெற்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால், அவர்களைத் தக்கவைக்க தேர்வுக்குழு விரும்புகிறது. அதுமட்டுமல்லாமல் 2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தயார் செய்யும் முனைப்பில் தேர்வுக்குழுவினர் உள்ளனர்.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ” உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி 22 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. ஆதலால் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலான அணியைத் தேர்வு செய்யவே அதிகமாக தேர்வுக்குழுவினர் விரும்புவார்கள். குறிப்பாக 3 விக்கெட் கீப்பர்களை ஒருநாள் போட்டி மற்றும் டி20க்காக தயராக வைத்திருக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்
ஆனால், பிசிசிஐ அதிகாரிகள் தோனியுடன் பேசி அவரின் எதிர்காலத் திட்டம் குறித்து பேசுவார்களா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. ஓய்வு என்பது தனிப்பட்ட வீரரின் முடிவு. தேர்வுக்குழுவினரோ, அல்லது வேறுயாரும் இந்த விஷத்தில் தலையிடவும், முடிவு எடுக்கவும் உரிமை இல்லை.
ஆனால், 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அதில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இடம் பெறவே அதிகமான வாய்ப்புகள்இருக்கின்றன.
ரிஷப்பந்துக்கு மாற்றாக 2-வது மற்றும் 3-வது விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் ஆலோசிக்கப்படும். ஆனால், அதிகபட்சாக ரிஷப்பந்துக்குதான் வாய்ப்பு அளிக்கப்படும். அவரின் உடல்தகுதியும், பேட்டிங் திறமையும் சிறப்பாக இருந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.