கங்குலி தலைமையின் கீழ் விளையாடிய காலக்கட்டத்தில்தான் அதிகமான நினைவுகள் சம்பவங்கள் உள்ளன என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். எம்எஸ் டோனி தலைமையின் கீழ் இவர் விளையாடும்போதுதான் 2011-ல் இந்தியா 50 ஓவர் உலக கோப்பையையும், 2007-ல் டி20 உலக கோப்பையையும் கைப்பற்றியது. 2011 உலக கோப்பையின்போது தொடர் நாயகன் விருதை பெற்றார்.
இருந்தாலும் கங்குலி தலைமையின் கீழ் விளையாடும்போதுதான் நினைத்துப் பார்க்கக்கூடிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
17 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய யுவராஜ் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் விளையாடும்போது அவரிடம் இருந்து அதிக அளவில் ஆதரவு கிடைத்தது. அவரது கேப்டன்ஷிப்பில் விளையாடியபோது நினைத்து பார்க்கக்கூடிய ஏராளமான சம்பவங்கள் உள்ளன. ஏனென்றால் அவர் எனக்கு ஆதரவு கொடுத்தார். அவர் அளித்தது போன்ற ஆதரவு எம்எஸ் டோனி மற்றும் விராட் கோலியிடம் இருந்து கிடைக்கவில்லை.
முத்தையா முரளீதரன் பந்தை எதிர்கொள்வதற்கு நான் மிகப்பெரிய அளவில் திணறினேன். அவரது பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து எந்த யுக்தியும் தெரியவில்லை. அப்புறம் சச்சின் தெண்டுல்கர் என்னிடம் வந்து, ஸ்வீப்பிங் ஆடக் கூறினார். எனக்க அதன்பின் எளிதாக இருந்தது.
அவுட் ஸ்விங் பவுலிங் மூலம் மெக்ராத் எனக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி கொடுத்தார். அதிர்ஷ்டம், நான் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு எதிராக விளையாடவில்லை. வெளியில் இருந்து ஆட்டத்தை பார்த்து சீனியர் வீரர்களை உற்சாக மூட்டிக் கொண்டிருந்தேன்’’ என்றார்.
மேலும் இது குறித்து பேசிய யுவராஜ் “கொரோனா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாத அச்சத்தை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையத்தை பார்த்து தெரிந்துக்கொள்ள வேண்டும், தேவையற்ற வதந்திகளையும் அச்சத்தையும் கைவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.