கிரிக்கெட் வீரர்களுக்கு கடவுள் போன்றவர் தோனி. இவருக்கு அருகில் ‘டிரசிங்’ அறையில் உட்காரப் போகிறேன் என்பதை நினைத்தாலே, சிலிர்ப்பாக உள்ளது,” என, சென்னை அணி வீரர் ஜெகதீசன் தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7-மே 27ல் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. இதில் சென்னை அணி சார்பில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன், 22. டி.என்.பி.எல்., தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
சென்னை அணியில் கேப்டன் தோனி, விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என்பதால், இவருக்கு நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து ஜெதீசன் கூறியது:
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஐ.பி.எல்., ஏலத்தை ‘டிவி’ யில் பார்த்தேன். யாராவது ஏலத்தில் எடுப்பார்கள் என, நம்பிக்கை இருந்தது. கடைசியில் சென்னை அணியில் இடம் பிடித்ததும், மிகவும் உற்சாகம் அடைந்தேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக நினைக்கிறேன்.
கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காது எனத் தெரியும். ஏதாவது ஒரு சில போட்டிகளில் களமிறங்க முடிந்தால், சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். தோனியை பொறுத்தவரை, கிரிக்கெட் வீரர்களுக்கு கடவுள் போன்றவர். இவருக்கு அருகில் ‘டிரசிங்’ அறையில் உட்காரப் போகிறேன் என்பதை நினைத்தாலே, சிலிர்ப்பாக உள்ளது.