தோனியினால் தோற்றோம் , எங்கள் பந்து வீச்சாளர்கள் கிரிமினல்ஸ் : கோலி காட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், தோனியின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதன் 24 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்றிரவு மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் கோலி 18 ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். பின்னர் குயின்டன் டி காக்கும், டி வில்லியர்ஸும் அதிரடியாக விளையாடினர். இவரும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பவுண்டரி, சிக்சர்களாக விளாசிய இவர்கள் 2-வது விக்கெட்டிற்கு 103 ரன்கள் சேர்த்தனர்.

டி காக் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டி வில்லியர்ஸ், 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் சாம் பில்லிங்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனதும் ரன்வேகம் கொஞ்சம் குறைந்தது. அடுத்து வந்த கோரி ஆண்டர்சன் 2, கிராண்ட்ஹோம் 11, பவன் நேகி 0, வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களில் அவுட் ஆக, மன்தீப் சிங் 17 பந்துகளில் 32 ரன் எடுத்து அணி, 200 ரன்களை கடக்க உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி, ஒரு கட்டத்தில் 240 ரன்கள் எடுக்கும் என்ற நிலையில் இருந்தது. கடைசி கட்டத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அவர்களின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்கள். சென்னை அணியின் பிராவோ, தாகூர்,  இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னர் 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. பவன் நேகி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் வாட்சன் சிக்சர் அடிக்கும் முயற்சியில் முகமத் சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 7 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடுவுடன் இணைந்தார். ராயுடுவின் அதிரடியால் சென்னை, 5 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது.

இந்நிலையில் 11 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் ரெய்னா. அடுத்து வந்து கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் 9 ரன்கள், ஜடேஜா 3 ரன்களில் திருப்திப்பட்டு வெளியேற, 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது சிஎஸ்கே.

இனி அவ்ளோதான் சென்னை என்று ரசிகர்கள் சோகமான நிலையில், சிங்கிளாக வந்த சிங்கம் தோனி, ஏகப்பட்ட விசில் பறக்க இறங்கினார் களத்துக்குள். ராயுடுவுடன் கை கோர்த்தார். இருவரும் பெங்களூரு பந்து வீச்சை பிரித்து மேய்ந்தனர். தோனி தனது ஸ்டைலில் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட, மிரண்டது பெங்களூர்.

ஸ்பின் பந்துகளில் தடுமாறுகிறார் என்ற விமர்சனத்தை நேற்று தவிடு பொடியாக்கினார் தோனி. பெங்களூர் கேப்டன் விராத், பந்துவீச்சாளர்களிடம், ’அப்படி போடி, இப்படி போடு’ என்று ஏதேதோ சொல்லிப் பார்த்தும் பலனில்லை.

கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 71 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் அதிரடியாக விளையாடினர். 17.2 வது ஓவரில் தோனி, சிக்சருடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ய, அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ராயுடு ரன் அவுட்டானார். அவர் 8 சிக்சர், 3 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். அடுத்து பிராவோ வந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைபட்ட நிலையில், 2 பந்துகள் மீதமிருக்க, வழக்கம் போல சிக்சர் அடித்து ஆட்டத்தை அமர்க்களமாக முடித்து வைத்தார் தோனி.

தோனி ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 7 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 70 ரன்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் சேஹல் 2 விக்கெட்டு களையும், உமேஷ் யாதவ் மற்றும் பவன் நேகி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.  ஆட்ட நாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

Editor:

This website uses cookies.