சிக்ஸரில் புதிய சரித்திரம் படைத்த தல தோனி
ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி தோனி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.
தவான் 47 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி), ரிஷப் பந்த் 13 பந்தில் 25 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா, இம்ரான் தாகீர் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 148 ரன் இலக்கை எடுத்தது. சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வாட்சன் 26 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 32 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), ரெய்னா 16 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, ரபடா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி இருந்தது டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது.
இது தவிர இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டனான தோனி, புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளார்.
நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்த தோனி, ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஏ.பி.டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்;
கிறிஸ் கெய்ல் – 296 சிக்ஸர்கள்
தோனி – 187 சிக்ஸர்கள்
ஏ.பி டிவில்லியர்ஸ் – 186 சிக்ஸர்கள்
சுரேஷ் ரெய்னா – 186 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா – 184 சிக்ஸர்கள்.