ரிஷப் பண்ட் மோசமாக ஆடியதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி காரணம் என காரசாரமாக பேசியிருக்கிறார் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2019 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு பிறகு எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த காலகட்டத்தில் இந்திய அணிக்கு முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
ரிஷப் பண்ட் பலமுறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் படுமோசமாக விளையாடியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். தோனிக்கு மாற்று வீரராக இவர் சரியாக இருப்பாரா? இவர் சாதாரண கிரிக்கெட் வீரரை போலவே ஆடத் தெரியவில்லை; எப்படி அத்தனை பெரிய லெஜெண்டிற்கு இணையாக இருப்பார்? என பல கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இப்படி பல விமர்சனங்கள் வந்த பிறகு, ரிஷப் பண்ட் வெளியில் அமர்த்தப்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் சில தொடர்களில் விளையாடி வந்தார். இதற்கிடையில் மகேந்திர சிங் தோனியின் வருடாந்திர ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதனால் அவரால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆகையால் தோனியின் இடத்திற்கு ரிஷப் பண்ட் தவிர வேறு மாற்று வீரரும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுவும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகின.
இந்நிலையில் ரிஷப் பண்ட் இப்படி மோசமாக செயல்பட்டதற்கு காரணம் தோனி மட்டுமே என கடுமையாக சாடியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத். அவர் கூறுகையில்,
“ரிஷப் பண்ட் ஒவ்வொரு முறை களத்திற்கு வரும் பொழுதும் அவர் எம்எஸ் தோனி உடன் ஒப்பிடப்படுகிறார். இளம் வீரரை மிகப்பெரிய வீரருடன் ஒப்பிடும் பொழுது ஒருவித தயக்கமான மற்றும் பயம் கலந்த மனநிலை ஒட்டிக்கொள்ளும். அப்படியான மனநிலையிலேயே ரிஷப் இருந்து வந்தார். அவரை நாங்கள் பலமுறை அதிலிருந்து வெளியே வரும்படி கூறினோம். அதற்காக தொடர்ந்து அவர் முயற்சித்து வருகிறார்.” என்றார்.