மும்பை இந்தியன்ஸ் அணியை கதிகலங்கவிட்ட சிஎஸ்கே வீரர் விலகல்… இதோடு 2 பேர் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றம்!

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் சிஎஸ்கே அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி.

16ஆவது ஐபிஎல் தொடர் துவங்க இருக்கிறது. வருகிற மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் எடுக்கப்பட்ட தீபக் சகர் காயம் காரணமாக விலகியதால் சற்று பின்னடைவை சந்தித்தது சிஎஸ்கே அணி. அந்த இக்கட்டான சூழலில் தீபக் சகருக்கு பதிலாக இளம் வீரர் முகேஷ் சவுத்ரி பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்பட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட முகேஷ், ஒருமுறை 4 விக்கெட்டுகள், 2 முறை 3 விக்கெட்டுகள் உட்பட 13 போட்டிகளில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் இவர்தான்.

குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்து முக்கியப் பங்காற்றினார். பந்தை நன்றாக ஸ்விங் செய்து திணறடித்தார். எமெர்ஜிங் வீரர் விருதுக்கும் கடந்த சீசனில் போட்டிபோட்டார்.

தீபக் சகர் உடன் இணைந்து பவர்-பிளே ஓவர்களில் ஜோடியாக சிஎஸ்கே அணிக்கு கலக்குவர் என எதிர்பார்த்து இருந்த நிலையில், ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்னர் முகேஷ் சவுத்ரி இன்னும் காயத்திலிருந்து குணமடையவில்லை. ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று தகவல்கள் வந்தது.

சையது முஸ்தக் அலி தொடருக்கு பிறகு இவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து எந்தவித உள்ளூர் போட்டிகளிலும் காயம் காரணமாக விளையாடவில்லை என்றும் பின்னர் தெரிய வந்தது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி துவங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பு முகேஷ் சவுத்ரி-க்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. முடிவில், முகேஷ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. கூடுதலாக 4-5 வாரங்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆகையால், முகேஷ் சவுத்ரி இந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலக்குகிறார். இவருக்கான மாற்று வீரரை சிஎஸ்கே அணி விரைவில் அறிவிக்கும் என்றும் தகவல்கள் வந்திருக்கிறது.

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இவர் அபாரமாக பந்துவீச்சில் செயல்பட்டதை எவராலும் மறக்க முடியாது. முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இவர் விலகியிருப்பது சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுக்கு சற்று பின்னடைவை கொடுத்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.