ஐபிஎல் தொடரை பொறுத்தவரை இந்த அணியில் தான் பெஸ்ட் பினிஷர்ஸ் இருக்கிறார்கள் என பேட்டி அளித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் துவங்கவிருக்கிறது. 5 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் இல்லாமல் கடும் வறட்சியில் இருந்த ரசிகர்கள் இந்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதில் பங்கேற்க ஏற்கனவே இந்தியாவில் இருந்து வீரர்கள் பலர் துபாய் மற்றும் அபுதாபி சென்றுவிட்டனர்.
சில முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இது அந்தந்த அணிகளுக்கு பெருத்த பின்னடைவை தந்தாலும் மாற்று வீரர்களை அணிகள் ஏற்கனவே அறிவித்து விட்டது. போட்டிக்கான அட்டவணையும் வருகிற ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? யார் அதிக ரன்கள் குவிப்பார்? யார் அதிக விக்கெட்டுகள் எடுப்பார்? என்கிற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலர் கொடுத்து வருகின்றனர்.
இந்த வகையில் எந்த அணியில் பெஸ்ட் பினிஷர்ஸ் இருக்கிறார்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இவர் கூறுகையில், “முதலாவதாக மும்பை அணியில் கீரன் போலார்டு உலகிலேயே சிறந்த டி20 வீரர் என அனைவரும் அறிவர். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 28 பந்துகளில் 72 ரன்கள் விளாசி வெற்றி பெற்றுத் தந்தார். அதேபோல் இவர் சுழல் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொள்வதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் மைதானங்களில் சிறப்பாக விளையாடுவார் என நான் கருதுகிறேன்.
இரண்டாவதாக கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரசல் இருக்கிறார். இவரும் பலமுறை அந்த அணிக்காக வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் என நாம் பார்த்திருப்போம். அதேபோல் அந்த அணியில் மார்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே சிறந்த பினிஷர்ஸ். அவர்கள் இருக்கையில் அந்த அணிக்கு கவலை இல்லை.
இவர்கள் மூவரையும் ஐபிஎல் தொடரின் சிறந்த பினிஷர்ஸ் என நான் கருதுகிறேன்.” என்றார்.
ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வருகிற ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். இதில் எவ்வித மாற்றமும் இருக்காது என சேர்மன் பிரிஜேஷ் படெல் கூறியிருக்கிறார்.