இவரை வைத்து டெல்லி அணியை முடித்துக்கட்டுவோம்: சூசகமாக சொன்ன ரோகித்! அது பும்ரா, சூரியகுமார் யாதவ் இல்லை
இறுதிப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும் பொழுது புதிய வீரர் ஒருவரை பயன்படுத்த இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருக்கிறார்
செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடர் தற்போது இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இன்று மாலை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை மற்றும் டெல்லி இரு அணிகளும் மோதுகின்றன.
டெல்லி அணி இறுதிப் போட்டி வரை வந்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை கோப்பையை வென்று இருக்கிறது. இந்த இரு அணிகளில் பலம் மிக்கதாக மும்பை அணி காணப்படுகிறது பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இளம் வீரர்களை கொண்டு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருவரும் சிறந்த முறையில் வழிநடத்தி இறுதிப்போட்டி வரை எடுத்து வந்திருப்பது சாதாரண காரியமல்ல. இதை வைத்து எளிதாக டெல்லி அணியை எடைபோட முடியாது என மற்றொரு பக்கம் கருத்துக்களும் வந்தவண்ணம் இருக்கின்றன.
இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் கோப்பையை வெல்வதற்கு முழு முயற்சியுடன் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு சற்றும் பஞ்சமிருக்காது. இதனை காண்பதற்கு ரசிகர்களும் அவளோடு உள்ளனர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக இளம் சுழல்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவை பயன்படுத்த இருப்பதாக ரோகித்சர்மா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
“டெல்லி அணியை பொறுத்தவரை இடதுகை ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஹெட்மையர், ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இருக்கின்றனர். இவர்களை சமாளிப்பதற்கு ஜெயந்த் யாதவ் சிறந்த தேர்வாக இருக்கும்.” என ரோகித் சர்மா குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அவருக்கு இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
ஜெயந்த் யாதவ் இந்த சீசனில் இதுவரை ஒரே ஒரு லீக் போட்டி மட்டுமே விளையாடியிருக்கிறார். இருப்பினும் அவர் டெல்லி அணியில் ஏற்கனவே விளையாடி இருப்பதாலும் வீரர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என அவருக்கு தெரியும் என்பதாலும் ரோகித் சர்மா இந்த முடிவு எடுத்திருக்கலாம் யூகிக்கப்படுகிறது.