இளம் சுழற்பந்து வீச்சாளரை அடுத்த சீசனில் டெல்லி அணிக்கு ஆடுவதற்காக கைமாற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெற்று தொடர் முழுவதும் மிகவும் சிறப்பாக செயல்பட்டவர் இளம் சுழல்பந்து வீச்சாளர் மயங்க் மார்க்கண்டே. இவர் அந்த சீசனில் மும்பை அணி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் இடம் பெற்றிருந்தார்.
14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அதேபோல 2019ஆம் ஆண்டு முதல் மூன்று போட்டிகளில் மயங்க் மார்க்கண்டே இடம் பெற்றார். துவக்கத்தில் இவருக்கு சரிவர எடுபடவில்லை என்பதனால், இளம் வீரர் ராகுல் சகாருக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது.
ராகுல் சகார் அதை சிறப்பாக பயன்படுத்தி நன்கு செயல்பட்டு தொடர் முழுவதும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
2018-ம் ஆண்டு மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இந்திய அணியிலும் மயங்க் மார்க்கண்டேவிற்கு இடம் அளிக்கப்பட்டது. தொடரில் ஒரு டி20 போட்டியில் இவர் ஆடியுள்ளார். அதன் பிறகு இந்திய ஏ அணியிலும் இவர் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், 2020ஆம் ஆண்டு மார்க்கண்டேவை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கைமாறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
மார்க்கண்டேவின் இடத்தை நிரப்ப வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஷெர்ஃபான் ரூதர்போர்டை மும்பை அணி எடுத்துள்ளது. கடந்த சீசன் ஏலத்தில் ரூதர்போர்டை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது டெல்லி அணி. அடுத்த சீசனில் அவர் மும்பை அணிக்காக ஆட இருக்கிறார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தற்போது அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சனே, ராகுல் டெவாட்டியா ஆகிய மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் நிலையில், மார்க்கண்டேவை எடுப்பதன் அவசியம் என்னவென ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.