டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி.. முதல் பெண்கள் ப்ரீமியர் லீக் கோப்பையை தட்டித்தூக்கியது மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடித்த 131 ரன்களை சேஸ் செய்து, முதல் ஐபிஎல் கோப்பையை தட்டித்தூக்கி உள்ளது மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி.

பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெண்கள் அணி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் மற்றும் கேப்டன் மெக் லேன்னிங் தவிர, மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எவரும் சோபிக்கவில்லை. நிலைத்து நின்று ஆடிவந்த மேக் லேன்னிங்(35) தவறான நேரத்தில் ரன் அவுட்டாகி ஆட்டம் இழந்த பிறகு, டெல்லி அணிக்கு வரிசையாக விக்கெட் சரிந்தது.

16 ஓவர்களில் 79 ரன்கள் மட்டுமே அடித்திருந்தபோது, 9 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறி வந்தது டெல்லி அணி. அப்போது 10ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷிகர் பாண்டே மற்றும் ராதா யாதவ் இருவரும் கடைசி 24 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை போராடக்கூடிய ஸ்கோராக மாற்றினார். 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் அடித்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

இந்த மைதானத்தில் எளிதாக அடிக்கக்கூடிய ஸ்கோராக இது தெரிந்தாலும் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிக்கு கடும் தாக்குதலை டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சாளர்கள் பவர்-பிளே ஓவர்களில் கொடுத்தனர். முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு, உள்ளே வந்து சற்று மைதானத்துடன் விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்கைவர்-பிரட் இருவரும் ஆரம்பத்தில் ரன்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, விக்கெட்டுகள் விடக்கூடாது என்ற முனைப்பிலேயே விளையாட்டினர்.

இந்த முடிவு மும்பை அணிக்கு சாதகமாகவே அமைந்தது. பத்து ஓவர்கள் கடந்த பிறகு, இந்த ஜோடி மெதுவாக அதிரடியான ஆட்டத்திற்கு நகர்ந்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. ஹர்மன்பிரித் கவுர் (37) துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய ஸ்கைவர்-பிரட், போட்டியின் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார்.

20வது ஓவரில் 131 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணி, முதல் பெண்கள் பிரீமியர் லீக் கோப்பையை தட்டிச்சென்று வரலாறு படைத்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.