சிஎஸ்கே ஓய்வறையில் பதட்டத்துடன் தோனி!

எப்பேற்பட்ட பிரஷரையும் ஊதித் தள்ளிய தோனி, முதன் முறையாக டென்ஷனுடன், யாருடனும் அதிகம் பேசாமல் ஓய்வறையில் உள்ளாராம்

ஆம்! உண்மை தான்.

2015ம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட போது, ஒட்டுமொத்த தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் நொந்து போனார்கள். அதைவிட கொடுமை, ‘இப்படித் தான் உங்கள் டீம், ஒவ்வொரு ஆண்டும் பிளே ஆஃப்பிற்கு தவறாமல் வருகிறதா!?’ என்று மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல அணிகளின் ரசிகர்கள் வெறுப்பேத்தியது மேலும் நம்மவர்களை நொந்து போகச் செய்தது.

இது ரசிகர்கள் மட்டுமல்ல.. வீரர்களையும் பாதித்தது. குறிப்பாக தோனியை. மற்றவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால், தோனி சென்னை அணியின் ஒரு அங்கமாகவே இருக்கிறார். அப்போது அவர் மீதும் பல புகார்கள் கூறப்பட்டது. தோனிக்கும் மேட்ச் பிக்ஸிங்கில் தொடர்பு உள்ளது என்று செய்திகள் றெக்கை கட்டின. ஆனால், மவுனமாக மவுனம் காத்தார் தோனி.

அதன்பின், 2016ல் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற நிர்வாகம் தோனியை கேப்டனாக்கி, அதில் அவரால் ஜொலிக்க முடியாமல் போனது எல்லாம் வரலாறு!. ஆனால், 2017ல் ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக்கி, தோனியை ஒரு வீரராக முடக்கி, ‘ஸ்மித் தான் காட்டின் உண்மையான ராஜா. தோனியை முற்றிலும் மறைத்துவிட்டார்’ என்று வெளிப்படையாக புனே நிர்வாகம் புகழ் பாடியது மறக்க முடியாத வரலாறு!.

அதற்கு, தோனியின் காதல் மனைவி சாக்ஷி, புனே நிர்வாகத்துக்கு பதில் அளித்த ‘எறும்பு – பறவை’ கதை, தர்மஅடி ரகம்.

இப்படிப்பட்ட ஒரு மனநிலையில் இருந்து தோனி இன்று மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக்கப்பட்டுள்ளார். பயிற்சிக்காக சென்னை வந்த போது, ரசிகர்கள் காட்டிய அளப்பறியா அன்பால் நெகிழ்ந்து போன தோனி, அதன்பிறகு நடந்த சிஎஸ்கே நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க உரையாற்றினார்.

புனே நிர்வாகம் அளித்த கசப்பான வரலாற்றை மறக்கும் அளவிற்கு, தமிழக ரசிகர்கள் மீண்டும் வரவேற்றது, தோனியே எதிர்பார்க்காத ஒன்று!. அதே நிகழ்ச்சியில் தோனி சொன்ன வார்த்தைகள் இவை, ‘இனி என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம்’ என்பது.

இந்த வார்த்தைகள் தான், இன்று மும்பைக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட இருக்கும் நிலையில் தோனியை ஓய்வறையில் டென்ஷனாக வைத்துள்ளது என்கிறது நமக்கு களத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவல். ரசிகர்களின் அளப்பறியா அன்புக்கு கைமாறாக அவர் தர வேண்டியது வெற்றியைத் தானே!. அந்த வெற்றியை இந்தத் தொடரில் தந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் தோனி.

புனே பரிசளித்த ரணம், தமிழக ரசிகர்கள் பரிசளித்துக் கொண்டிருக்கும் அன்பு… இவை அனைத்தையும் மறந்து, ஒரு போர் வீரனாக களத்தில் நின்று வெற்றியைத் தேடித் தர வேண்டிய நிர்பந்தம் தனக்கு இருப்பதாக அவர் நினைக்கிறார்.

எப்பேற்பட்ட பிரஷரையும் ஊதித் தள்ளிய தோனி, முதன் முறையாக டென்ஷனுடன், யாருடனும் அதிகம் பேசாமல் ஓய்வறையில் உள்ளாராம். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்தும், சிஎஸ்கே போட்டிகள் சென்னையில் நடக்கக் கூடாது என்ற முழக்கமும் தோனியிடம் சொல்லப்பட்டுவிட்டதாம்!.

 

Editor:

This website uses cookies.