விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியில் உத்திரபிரதேச அணியை வீழ்த்திய மும்பை அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டிக்கு உத்திரபிரதேச அணியும் மும்பை அணியும் தகுதி பெற்றன.
இந்த தொடரின் இறுதி போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற உத்திரபிரதேச அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய உத்திரபிரதேச அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மாதவ் கவ்சிக் 158 ரன்களும், சமர்த் சிங் 55 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அக்ஷ்தீப் நத்தும் 55 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த உத்திரபிரதேச அணி 312 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 313 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ப்ரித்வி ஷா இந்த போட்டியிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆதித்யா தரே 118 ரன்களும், ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சிவம் துபே 42 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் 41.3 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையையும் வென்றுள்ளது.
இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டன் பிருத்வி ஷா 827 ரன்கள் குவித்து அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உத்தர பிரதேச அணியின் பந்து வீச்சாளர் ஷிவம் ஷர்மா 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.