நட்சத்திர பந்துவீச்சாளரை பறிகொடுத்த மும்பை அணி.. மிகுந்த சோகத்தில் ரசிகர்கள்!

மும்பை அணிக்காக விளையாடி வந்த டிரென்ட் போல்ட் இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 8 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு இருக்கிறார்.

பதினைந்தாவது ஐபிஎல் சீசனுக்கு முன்பாக மிகப்பெரிய ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மிகச் சிறந்த வீரர்களை எடுக்க பல கோடி ரூபாய்களை அள்ளி கொடுத்து வருகிறது. இதுவரை அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 12 கோடி ரூபாய்க்கும் மேல் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

அதற்கு அடுத்ததாக காகிசோ ரபாடா கிட்டத்தட்ட 9.25 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த வரிசையில் மற்றுமொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த டிரென்ட் போல்ட் கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்கு முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அவரை தக்கவைக்கவில்லை என்றாலும், ஏலத்தில் எத்தனை கோடி சென்றாலும் எடுக்கும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்பட்டது.

இவரை எடுக்க ஆரம்பத்தில் ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் போராடின. கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் வரை பெங்களூரு அணி போட்டி போட்டது. அதற்கும் அதிகமாக சென்றதால் அதன்பிறகு ராஜஸ்தான் அணியுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி இவரை எடுக்க தொடர்ந்து போராடியது. மும்பை அணியால் 7.75 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்கப்பட்டது.

ராஜஸ்தான் அணி அவரை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது. அதற்கும் அதிகமாக செல்ல மும்பை அணி முன்வரவில்லை. இறுதியாக அவர் ராஜஸதான் எடுக்கப்பட்டு இருக்கிறார். மும்பை அணிக்கு முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஒருவர் தற்போது வேறு அணிக்கு சென்றிருப்பதால் மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியில் இருப்பது சமூக வலைதளங்களில் வெளிப்பட்டது.

மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தற்போது வரை யாரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி, குஜராத் ஆகிய அணிகள் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர். மீதமுள்ள அணிகள் தங்களது திட்டப்படி நிதானம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.