ரஞ்சி கோப்பை தொடரில் நடுவரின் தவறான தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் முறைத்ததால், அவமரியாதை செய்த குற்றத்திற்காக போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் முரளி விஜய்-க்கு விதிக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது நடைபெறறு வரும் உள்ளூர் போட்டிகளின் பிரதான தொடரான ரஞ்சி கோப்பை தொடரில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இரு அணிகளும் மோதிவருகின்றன. இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் 70வது ஓவரின்போது, பேட்ஸ்மேன் பவன் அடித்த பந்து பேட்டில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. இதற்காக தமிழக வீரர்கள் நடுவரிடம் அவுட் அப்பீல் செய்தனர். ஆனால், நடுவர் பண்டிட் அவுட் தரவில்லை. அவுட் என தெளிவாக தெரிந்தும் தராததால் வீரர்கள் கடும் அதிருப்தி அடைத்தனர்.
அச்சமயம், வீரர்கள் நடுவரை ஒட்டுமொத்தமாக சூழ்ந்துகொண்டு அவுட் குறித்து வினவினர். அப்போது ஆத்திரமடைந்த முரளி விஜய், கோபத்துடன் நடுவர் பண்டிட் நோக்கி நகர்ந்தார். இதைக்கண்ட மற்றொரு களநடுவர் அவரை தடுத்து நிறுத்தினார்.
அஸ்வின் மற்ற வீரர்களை அமைதியாக பீல்டிங் செய்ய செல்லுமாறு பணித்தார். இந்த சச்சரவினால், மைதானத்தில் சிறிதுநேரம் சலசலப்பு நிலவியது.
இந்த செய்தி அறிந்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், நடுவரின் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறியதற்காக, போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை முரளி விஜய்க்கு அபராதமாக விதித்தது.
டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கர்நாடக அணிக்கு துவக்க வீரர் அகர்வால் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 78 ரன்களும், பவன் 65 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.
தமிழக அணி சார்பில் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், கிருஷ்ணமூர்த்தி, அஸ்வின் மற்றும் அபராஜித் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.