பிசிசிஐ உடன் மறைமுகமாக போருக்கு புதிய விதை போடும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்!!
ஐபிஎல் தொடர் கடந்த 12 வருடமாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொள்வதுதான் அதிகபட்சமாக சர்வதேச வீரர்களின் பெரும் ஆசையாக இருக்கும். இதற்காக ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து இலங்கை, வங்கதேசம், ஜிம்பாவே, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வீரர்களை தவிர மற்ற எந்த நாட்டு வீரர்கள் ஆயினும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளலாம் என்பது விதி. ஒவ்வொரு அணி வீரர்க்ளும் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் தொடர்பான வேலைகள் படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி தோள்பட்டை காயம் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக வெளியேறி விட்டார். இவர் சென்ற வருடம் கொல்கத்தா அணிக்காக விளையாட ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஆவார். அதனை தாண்டி மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து லசித் மலிங்கா தனது சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வெளியேறினார்.
இதனை தொடர்ந்து இந்த இரண்டு அணிகளும் வெளியேறிய இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரரை தேட முயற்சி செய்து வந்தது. இரண்டு அணிகளுமே வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை தங்கள் அணிக்காக ஆட வைக்க திட்டமிட்டு அவரை அணுகி விருப்பம் தெரிவித்து இருந்தன.
ஆனால் இதனை அறிந்து கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அவருக்கு முற்றிலுமாக அனுமதியை அளிக்க மறுத்துவிட்டது. இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் கூறுகையில் “ஐபிஎல் தொடரில் ஆட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு அழைப்பு வந்திருந்தது.ஆனால் எங்கள் அணி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் எங்களுக்கு முக்கியமானவர் அவரை நாங்கள் ஐபிஎல் தொடருக்கு அனுப்பி விட்டால் எங்களுக்கு ஆள் இருக்காது. இதனால் நாங்கள் தடை சான்றிதழ் வழங்கவில்லை என்று நேரடியாக அறிவித்திருக்கிறார்”
வேறு எந்த நாட்டு வீரரை கேட்டிருந்தாலும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்களுக்கு தேவை என்றாலும் உடனடியாக ஐபிஎல் தொடருக்கு அந்த வீரர்களின் நலன் கருதி அனுப்பி வைத்துவிடும். ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ யுடன் கடந்த சில வருடங்களாகவே இப்படி முரண்டு பிடித்து மறைமுகமாக சண்டைக்கு வித்திட்டு கொண்டு இருக்கிறது.