சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்கள், அணிகள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி, வங்கதேசத்துடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய வங்கதேச அணிக்கு சவ்மியா சர்கார் 81 ரன்கள் எடுத்து கை கொடுத்தன் மூலம் 38 ஓவரிலேயே இலக்கை அடைந்த வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி வங்கதேசம் – விண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ஹெய்ட்மர் ஆகியோர் ஜெட் வேகத்தில் தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளனர்.
விண்டீஸ் அணியுடனான தொடரில் 5 விக்கெட்டுகளை அள்ளிய முஸ்தபிசுர் ரஹ்மான் 695 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே போல் வங்கதேச அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான மெஹ்தி ஹசன் 28வது இடத்தில் இருந்து 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதே போல் விண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஹெய்ட்மர் 40வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.