“ரோகித் சர்மா இதனால் என்னை பைனலில் எடுக்காமல் விட்டிருப்பார்.” என்பதை தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்ல முடியாமல் வெளியேறியுள்ளது. இம்முறை ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் செயல்பட்ட விதத்திற்காக கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார்.
டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்ததில் துவங்கி ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரை வெளியில் அமர்த்தியது மற்றும் இரண்டாவது இன்னிசில் எந்தவித திட்டமும் இல்லாமல் பவுலர்களை பயன்படுத்திய விதம் என்று அனைத்திற்கும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதது மிகப்பெரிய குறையாகவே பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஓவல் மைதானம் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் செல்லசெல்ல சுழல் பந்துவீச்சிற்கு சாதகமாக அமையும் என்பது வரலாறு. அதை எப்படி ரோகித் சர்மா மறந்தார் என்பதற்கு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னை ஃபைனலில் ஏன் எடுக்கவில்லை? என்பது குறித்து சமீபத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஸ்வின் பேசியதாவது:
“இந்த நேரத்தில் பைனலில் நான் எடுக்கப்படாத குறித்து பேசுவது சரியாக இருக்காது. இப்போதுதான் தோல்வியை தழுவினோம். மேலும் இந்த இரண்டு வருடங்கள் பைனல் வரை வருவதற்கு நானும் கடினமாக உழைத்திருக்கிறேன். கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த பைனலில் நான் இரண்டு இன்னிங்சில் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறேன்.
2018-19 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளின் மைதானங்களில் என்னுடைய ரெக்கார்ட் நன்றாகவே இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து உட்பட பல வெளிநாடு மைதானங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அதை வைத்து பேசுவது முற்றிலுமாக முட்டாள்தனம்.
கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடிய போது 2-2 என்ற கணத்தில் முடித்தோம். அப்போது நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளர் உடன் சென்றார்கள். ஆகையால் இம்முறையும் அப்படி ஒரு அணுகுமுறை தேவை என்று நினைத்து விட்டார்கள்.
கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நிலையிலிருந்து நாம் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு என்று திட்டம் இருக்கும், அதன்படி சென்றிருக்கிறார்கள். இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என நினைக்கிறேன். ரோகித் சர்மா அணிக்கு என்ன தேவை, தன்னுடைய திட்டத்திற்கு என்ன தேவை என செய்திருக்கிறார் அவ்வளவுதான்.
என்னுடைய கிரிக்கெட் கரியரில் மற்றவர்கள் என நினைப்பார்கள் என்கிற கட்டத்தில் நான் இங்கே இல்லை. என்னுடைய பௌலிங்கில் தவறுகள் இருந்தால் அதை விமர்சிப்பதும் நானாகவே இருப்பேன். சரி செய்வதும் நானாகவே இருப்பேன். மேலும் நான் இதுவரை செய்த பலனுக்காக இப்போது இந்திய அணியில் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் செயல்பட்ட விதத்திற்காக அணியில் இருக்கிறேன்.” என்றும் பேசினார்.