2013 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டு பிசிசிஐயினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று அவரது மனைவி பிசிசிஐ-க்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்ரீசாந்த் வழக்கை கையாண்ட டெல்லி போலீஸ் அதிகாரிக்கு அப்போது பரபரப்பான நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் கடும் நெருக்கடி இருந்ததாகவும் அதில் தன் இயலாமையை திசைத் திருப்ப ஸ்ரீசாந்த் மீது பழி சுமத்தி பொய் வழக்குப்போட்டார் என்றும் ஸ்ரீசாந்த் மனைவி புவனேஷ்வரி ஸ்ரீசாந்த் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
புவனேஷ்வரி ஸ்ரீசாந்த் தன் கடிதத்தில், ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் ஊழலில் ஈடுபடவில்லை என்றும் தவறானக் குற்றச்சாட்டுகள் ஸ்ரீசாந்தின் வாழ்க்கையை சீரழித்து விட்டது என்றும் நீதி கிடைக்க வேண்டும் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரு ஓவரில் ரன்கள் கொடுப்பதற்காக புக்கியிடமிருந்து ரூ.10 லட்சம் பெற்றார் ஸ்ரீசாந்த் என்பதே குற்றச்சாட்டு. மொஹாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் குறிப்பிட்ட ஓவரில் ஸ்ரீசாந்த் 14 ரன்களைக் கொடுத்தார். புக்கிகளுக்கு சிக்னலும் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் மனைவி தன் கடிதத்தில், “கிரிக்கெட் தெரிந்த எந்த ஒருவரும் தெரிந்து கொள்வார்கள் ஸ்ரீசாந்த் முதல் சில பந்துகளில் ரன்கள் கொடுக்கவில்லை. நோ-பால்களும் வைடு பால்களும் வீசவில்லை. அந்த ஓவரில் 14 ரன்கள் வரவில்லை 13 ரன்கள்தான் வந்தது, அதுவும் பேட்ஸ்மென் யாரென்றால் ஆடம் கில்கிறிஸ்ட். அவர் ஒரு கிரேட் பேட்ஸ்மென், வர்ணனையாளர்கள் ஸ்ரீசாந்தின் ஒவ்வொரு பந்தையும் பாராட்டினர். அதாவது ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஒரு பேட்ஸ்மெனே அந்தப் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியும் என்று வர்ணனையில் கூறியதை அனைவரும் இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்…அன்றைக்கு வெயில் 48 டிகிரி செல்சியஸ் அனைவருமே கையில் டவல் வைத்திருந்தனர்” என்று தன் கடிதத்தில் கூறியுள்ளார், டவல் வைத்திருந்ததுதான் புக்கிக்கு சிக்னல் என்று கூறப்பட்டதையடுத்து அவர் மனைவி இவ்வாறு தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஸ்ரீசாந்த் மீது பொய் வழக்குப் போட்ட போலீஸ் அதிகாரி நிர்பயா பலாத்கார வழக்கில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்தார் என்றும் அவரை ராஜினாமா செய்யக் கோரி கடும் கோரிக்கைகள் எழுந்தது என்றும் அவர் அந்த வழக்கில் தன் இயலாமையை திசைத்திருப்ப தன் கணவர் ஸ்ரீசாந்த் மீது பழி சுமத்தி அவரைப் பலிகடாவாக்கியுள்ளார், என்று அதிரடியாகக் குறிப்பிட்ட புவனேஷ்வரி ஸ்ரீசாந்த், கோர்ட் என்கணவரை நிரபராதி என்று கூறிய பிறகும் பிசிசிஐ இன்னும் கிடப்பில் போட்டுள்ளது. ‘அநீதி எங்கு இருந்தாலும் அது எவ்விடத்திலும் நீதிக்கு அச்சுறுத்தல்தான்’. ஆகவே என் கணவருக்கு நீதி வழங்க வேண்டும் என்று ஸ்ரீசாந்த் மனைவி தன் கடிதத்தில் கூறியுள்ளார்.