ஒரு வழியா நல்லது நடந்திருச்சு… தமிழக வீரர் நாராயண் ஜெகதீசனை ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான நாரயண் ஜெகதீசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல் இந்த வருடத்திற்கான ஏலத்திலும் ஆல் ரவுண்டர்களுக்கே கடும் போட்டி நிலவி வருகிறது. சாம் கர்ரான், பென் ஸ்டோக்ஸ், நிக்கோலஸ் பூரண் போன்ற நட்சத்திர வீரர்கள் பலர் அதிக தொகைக்கு ஏலம் போயினர்.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான நாரயணன் ஜெகதீசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜெகதீசனிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்க முடியாத சூழல் உள்ளதால், அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை சென்னை அணியில் இருந்து விடுவிப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்திருந்தது. இதனால் 20 லட்சம் ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்து ஜெகதீசன் ஏலத்தில் பங்கேற்றார்.
இவரை மீண்டும் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சித்தாலும், இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 90 லட்சம் ரூபாய்க்கு ஜெகதீசனை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜெகதீசனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலாவது ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.