தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ராஞ்சி மைதானத்துக்கு வந்த தோனியிடம் பேசியது என்ன? என்பது பற்றி, சுழல்பந்துவீச்சாளர் நதீம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, ராஞ்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் பின் தங்கியது. ஃபாலோ ஆன் பெற்ற அந்த அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன்களைச் சேர்க்கத் தடுமாறி, 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டிருந்த நதீம் (Shahbaz Nadeem) , 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டிக்கு பிறகு ஓய்வறைக்கு வந்த மகேந்திர சிங் தோனி, வீரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். இளம் வீரர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது நதீமுடன் தோனி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.
இதுபற்றி நதீமுடன் கேட்டபோது, ‘’போட்டிக்குப் பின் தோனியை சந்தித்தபோது, ‘எனது ஆட்டம் எப்படியிருக்கிறது?’ என்று கேட்டேன். ‘உனது பந்துவீச்சை பார்க்கிறேன். இப்போது பந்துவீச்சில் முதிர்ச்சித் தெரிகிறது. அதற்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடியதுதான் காரணம். உனது பயணம் தொடங்கிவிட்டது. வாழ்த்துகள்’ என்று தெரிவித்தார்’’ என்றார் நதீம்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்காக தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 12 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஏற்கெனவே ரோகித் இரண்டாவது இடம் வகிக்கிறார். அதேபோல டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ரோகித் 7-ஆவது இடத்தில் உள்ளார்.
இதற்கு முன்பு கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் மூன்று வகையான போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்திருந்தனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கேப்டன் விராட் கோலி (2ஆம் இடம்), புஜாரா(4ஆம் இடம்),ரஹானே(5ஆம் இடம்) மற்றும் ரோகித் சர்மா(10ஆவது இடம்) பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.