டி.20 உலகக்கோப்பைக்கு மேலும் இரண்டு அணிகள் தகுதி ; ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முதல் முறையாக நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்றுமூலம் நுழைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேரடியாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலயா அணி தகுதிபெற்றுள்ளது.
இதுதவிர 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை டி20 தரவரிசையில் முதல் 9 இடங்களில் இருந்த பாகிஸ்தான், இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் நேரடியாக தகுதிபெறும். தகுதிச்சுற்று மூலம் 6 அணிகள் தகுதிபெறும்.
தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தன. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் நமிபியா அணியும், நெதர்லாந்து அணியும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் வென்று உலகக் கோப்பைக்கையில் இடம் பிடித்துள்ளன.
துபாயில் நமிபியா அணியை எதிர்த்து ஓமன் அணி மோதியது. இதில் முதலில் பேட் செய்த நமிபியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 19.1 ஓவர்களில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்து.
இதையடுத்து, டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு முதல் முறையாக நமிபியா அணி தகுதிபெற்றுள்ளது. நமிபியா அணியின் ஆல்ரவுண்டர் ஸ்மித் 25 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
ஆனால், ஓமன் அணிக்கு வாய்ப்பு முடிந்துவிடவில்லை. அடுத்ததாக ஹாங்காங் அணியுடனான போட்டியில் வென்றால் ஓமன் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியும்.