விராட் கோஹ்லியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் பிட்னெஸ் சாவலை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதமர் மோடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோலி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்’, என கூறியிருந்தார்.கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் அண்மையில் தெரிவித்து இருந்தார். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், தான் அறிவித்த படி பிரதமர் மோடி விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் 1.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை மோடி வெளியிட்டுள்ளார்.
அதில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார். அதேபோல், 40 வயதிற்கு மேற்பட்ட துணிச்சலான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.