இவர் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பொக்கிஷம்: வார்னர் புகழாரம்!

இவர் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த பொக்கிஷம் என தமிழக வீரரை புகழ்ந்திருக்கிறார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் அபுதாபி மைதானத்தில் பலப்பரிட்சை மேற்கொண்டன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்வதை உறுதி செய்தார்.

இதனையடுத்து டெல்லி அணிக்கு முதல் முறையாக ஸ்டாய்னிஸ் துவக்க வீரராக களமிறங்கினார். அதிரடி வெளிப்படுத்திய அவர் 30க்கும் மேல் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 78 ரன்கள் விளாச டெல்லி அணிக்கு சிறப்பான துவக்கம் அமைந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட மற்ற வீரர்களும் நன்கு விளையாட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து இருந்தது.

சற்று கடின இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்ற வீரர்களும் சற்று தடுமாற்றத்துடன் ஆடவே நட்சத்திர வீரர் வில்லியம்சன் அதிரடியை வெளிப்படுத்தி 67 ரன்கள் விளாசினார். இளம் வீரர் சமத் 33 ரன்கள் அடிக்க 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது ஹைதராபாத் அணி. அபாரமாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த டேவிட் வார்னர் கூறுகையில், “இந்த வருட ஐபிஎல் தொடர் மூலம் ஐபிஎல்-க்கு கிடைத்த பொக்கிஷமாக நடராஜன் இருக்கிறார். அவரது அபாரமான பந்து வீச்சு அணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். உரிய நேரத்தில் கேட்ச் பிடிக்காமல் விட்டால் அது எதிர் அணிக்கு சாதகமாக முடிந்துவிடும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

அணியின் முக்கிய வீரர்களான சஹா மற்றும் புவி இருவரும் காயம் காரணமாக இல்லாமல் போனது சற்று பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்களின் பங்களிப்பினால் இத்தனை தூரம் நாங்கள் வந்திருப்பது பெருமிதமாக இருக்கிறது. இந்த தவறுகளை அடுத்த ஐபிஎல் தொடரில் சரிசெய்து நிச்சயம் கோப்பையை வெல்ல போராடுவோம். அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என நான் நம்புகிறேன். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.” என பேட்டி அளித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.