ஐ.சி.சி.,ன் இந்த முடிவு முட்டாள்தனமானது; ஆஸ்திரேலிய வீரர் காட்டம்
டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வரும் நிலையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நம்பிக்கையளித்து வருகிறது, ஆனால் ஐசிசி திடீரென 4 நாள் டெஸ்ட் என்று ஒரு புதிய யோசனையைத் தெரிவிக்க அதனை முட்டாள்தனமானது என்றார் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன்.
2017-ல் இந்தப் பரிசோதனை முயற்சிக்கு ஐசிசி அனுமதியளித்ததையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் இதுவரை 4 நாள் போட்டிகளாக நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆஸி. ஆப் ஸ்பின்னர் நேதன் லயன் ஊடகம் ஒன்றில் 4 நாள் டெஸ்ட்டா? “முட்டாள்தனமானது, உலகின் பெரிய டெஸ்ட் போட்டிகள், நான் ஆடிய சிறந்த டெஸ்ட் போட்டிகள் 5ம் நாள் வரையில் சென்றது.
2014 ஆஸ்திரேலியா-இந்தியா தொடரில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 5-ம் நாள் ஆட்டம் கடைசி அரைமணி நேர த்ரில்லராக அமைந்தது. அதே போல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு இடையே 2014-ல் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் ட்ராவாக 2 ஓவர்கள் இருக்கும் போது ரியான் ஹாரிஸ், மோர்னி மோர்கெலை பவுல்டு செய்து மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுத்தந்தது.
எனவே 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் எனக்கு நம்பிக்கையில்லை, மீண்டும் அதிக ட்ரா போட்டிகளே நடக்கும். தட்பவெப்ப நிலை என்ற காரணியும் உள்ளது.
மேலும் இந்த நாட்களில் பிட்ச்களும் மட்டையாளர்களுக்குச் சாதகமாக அமைக்கப்படுவதால் அணிகள் நீண்ட நேரம் பேட் செய்கின்றன. இந்த நிலையில் பிட்ச் கொஞ்சம் உடைந்தால்தான் 5ம் நாட்களில் ஸ்பின் எடுக்கும்.
4 நாள் டெஸ்ட்டுக்கு நான் முழு எதிரி, ஐசிசி இதனை பரிசீலிக்காது என்று நம்புகிறேன்” என்று சடசடவென பொழிந்தார் நேதன் லயன்.
2014 அடிலெய்ட் டெஸ்ட் விராட் கோலி கேப்டன்சியில் நடந்த போட்டி, இதில் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து முத்திரைப் பதித்தார் விராட் கோலி, அதுவும் மைக்கேல் கிளார்க் செய்த டிக்ளேரை அச்சுறுத்தும் விதமாக விராட் கோலி 2வது இன்னிங்ஸில் 364 ரன்கள் இலக்கை விரட்டி 141 ரன்களை 175 பந்துகளில் எடுத்து கலக்கி விட்டார் கலக்கி. இதனால் இந்திய அணி 304/6 என்று வந்து வெற்றியை உறுதி செய்த நிலையில் கோலி ஆட்டமிழக்க 315 ரன்களில் சுருண்டு இந்திய அணி தோல்வி கண்டது. ஆனால் மிகப்பிரமாதமான, கடைசி நேரம் வரை திரில் கூட்டிய டெஸ்ட் ஆகும் இது, இதைத்தான் நேதன் லயன் குறிப்பிட்டார்.