இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனிக்கு டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தமானது என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமான இவர், 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தார். இதனால் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தென்ஆப்பிரிக்கா தொடரிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்படி சைனி மாறிக்கொள்வார் என்று ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நவ்தீப் சைனி கிரிக்கெட் குறித்து ஜாகீர் கான் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட் நவ்தீப் சைனிக்கு பொறுத்தமானதாக இருக்கும். அதிவேகத்தில் பந்து வீசும் சைனி, தொடர்ச்சியாக சரியான லெந்தில் பந்து வீசுகிறார்’’ என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பிரதான பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று தென்னாப்பிரிக்க அணி ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், முதல் டெஸ்ட் ஆட்டம், அக். 2-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் பும்ராவுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையில் அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உமேஷ் யாதவ் சேர்ப்பு: பெங்களூரு என்சிஏவில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் சிகிச்சை நடைபெறவுள்ளது. பும்ரா குறைந்தது 8 வாரங்கள் ஒய்வெடுக்க வேண்டும். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை தேர்வாளர் குழு சேர்த்துள்ளது.
இந்தியாவுக்கு பின்னடைவு: வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இல்லாதது, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது. மேலும் அவரால், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வங்கதேசத்துடனான டி20, 2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டப் பரிசோதனையிலேயே முறிவு கண்டறியப்பட்டதால், காயத்தின் தன்மை சிறிதாக உள்ளது. ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற டி20 தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை. சீரான நீளம், அளவு, அதிரடி வேகத்தால் பும்ராவின் பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது.
முதல் டெஸ்ட் அக். 2 முதல் 6-ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக். 10 முதல் 14-ஆம் தேதி வரை புணேயிலும், மூன்றாவது டெஸ்ட் அக். 19 முதல் 23 வரை ராஞ்சியிலும் நடைபெறுகிறது.
டெஸ்ட் தொடருக்கான அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா. குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.