ஓய்வு பெறுவது குறித்தான திட்டம் எதுவும் தற்போது இல்லை என அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெய்ல் ஓபனாக தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் துவக்கத்தில் தொடர்ந்து பல மோசமான தோல்விகளை சந்தித்த கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடந்த வாரம் வரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலேயே இருந்தது.
தலைசிறந்த வீரர்கள் பலரை வைத்திருந்தாலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், அனைவரின் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலுமே மிரட்டல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதல் நான்கு இடத்திற்குள் கால் பதித்துவிட்டது.
கிரிஸ் கெய்ல் அணியில் இடம்பிடித்த பிறகு தான் பஞ்சாப் அணி வெற்றி பாதைக்கு திரும்பியதால், பஞ்சாப் அணியின் ஒவ்வொரு வெற்றியின் போதும் கிரிஸ் கெய்ல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார், பஞ்சாப் அணிக்கான தனது பங்களிப்பையும் கிரிஸ் கெய்ல் தொடர்ந்து சரியாகவே செய்து வருகிறார். பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கை கொடுத்தார்.
என்னதான் அதிரடியாக விளையாடினாலும், கிரிஸ் கெய்லுக்கு 41 வயதாகிவிட்டதால் ஓய்வு எப்பொழுது என்ற கேள்வி அவரை நோக்கியும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்தநிலையில், ஓய்வு குறித்தான தனது முடிவு என்ன என்பதை கிரிஸ் கெய்லே ஓபனாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருது வென்ற கிரிஸ் கெய்ல், ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு இது குறித்து பேசுகையில் “போட்டியின்போது பயிற்சியாளர் சீனியர் வீரர்களிடம் முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவசியம் என்றனர். நாங்கள் சிறப்பாக விளையாடியதற்கான மகிழ்ச்சி அடைகிறேன். அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னிடம் ஓய்வு வேண்டாம் என்று சொல்கிறார்கள், எனக்கும் தற்போது ஓய்வை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என்றார்.