நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் குவித்து வரலாறு படைத்துள்ளது.
நெதர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நெதர்லாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அம்ஸ்டல்வீனில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தபிறகு கூட்டணி சேர்ந்த சால்ட் – டேவிட் மாலன் ஜோடி நெதர்லாந்தின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.
இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 222 ரனள் குவித்த போது சால்ட் (122) விக்கெட்டை இழந்தார். டேவிட் மாலன் 125 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த ஜாஸ் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து வாணவேடிக்கை காட்டினர்.
இறுதி வரை ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 14 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டர்களுடன் 162 ரன்களும், லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 498 ரன்கள் குவித்து வரலாறு படைத்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்திருந்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது, தற்போது தனது அணியின் சாதனையையே முறியடித்து இங்கிலாந்து அணி மற்றொரு வரலாறு படைத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் இந்த ருத்ரதாண்டவ ஆட்டம் கிரிக்கெட் உலகிற்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இங்கிலாந்து வீரர்களின் இந்த ருத்ரதாண்டவ ஆட்டத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.