“ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் பணம் சம்பாதிக்கும் பல வகைகளில் திட்டங்களை வகுக்கும் பிசிசிஐ, முறையான தேர்வுகுழுவை வைத்துக்கொண்டு தரமான எதிர்கால இந்திய அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டவில்லையே ஏன்?.” என்று கடுமையாக சாடியுள்ளார் 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியைத்தழுவி கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. அத்துடன் 2013ஆம் ஆண்டு கடைசியாக ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி வென்றதுடன் சரி. அதன் பிறகு கோப்பைகளை வெல்லவில்லை.
அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா, அஸ்வின், முகமது சமி உள்ளிட்ட தரமான பல வீரர்கள் இருந்தும் இந்திய அணி இத்தகைய கோப்பைகளை வெல்ல முடியாமல் இருப்பது மிகப்பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. அத்துடன் பல்வேறு விமர்சனங்களையும் இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக சாடியதோடு, பிசிசிஐ பணம் சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வத்தை தரமான இந்திய அணியை உருவாக்குவதில் காட்டவில்லை என்று மிகப்பெரிய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் 1983 உலகக்கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கார்.
“கடந்த ஆறு ஏழு வருடங்களாக இந்திய தேர்வுக்குழுவை கவனித்து வருகிறேன். அவர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை, ஆழமான அறிவும் இல்லை, போதிய கிரிக்கெட் உணர்வும் தெரியவில்லை. ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளுடனான தொடர்களில் ஷிக்கர் தவானை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள். இதுபோன்ற தொடர்களில் தான் இளம் வீரர்களை கேப்டனாக நியமித்து, எதிர்கால கேப்டனை உருவாக்க வேண்டும். இப்போது எதிர்கால கேப்டன் இல்லாமல் இந்திய அணி பிரச்சனையை சந்தித்து வருகிறது.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்னும் பெயரை வைத்துக்கொண்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் கோடி கோடிகளாக சம்பாதிப்பது மட்டும் நோக்கம் இல்லை. இந்திய அணியின் பென்ச் பலம் போதிய அளவிற்கு இல்லை. ஓரிரு வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். எதிர்கால அணியை பலப்படுத்துவதை நோக்கமாக கொள்ளாமல், பணம் மட்டுமே வைத்து என்ன செய்வது?.” என்று சாடியுள்ளார் திலீப் வெங்சர்க்கார்.