ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 20 ஓவர்களில் 92 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான் அணி.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டி சார்ஜா மைதானத்தில் நடக்கிறது. டாஸ் பண்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சதாப்கான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடி ஆகியோர் இல்லாமல் இந்த தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் சயிம் ஆயுப்(17), தையாப் தாஹிர்(16), இமாத் வாசிம்(18) மற்றும் சதாப்கான்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். வாசிம் அடித்த 18 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது. துரதிஷ்டவசமாக எவரும் 20 ரன்களை கூட எட்டவில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
திக்கித்திணறி பேட்டிங் செய்து வந்த பாகிஸ்தான் அணி, அதிர்ஷ்டவசமாக ஆல் அவுட் ஆகாமல் தப்பியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்தது. சர்வதேச டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி அடித்து ஐந்தாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். (ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு 74 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதுவே தற்போது வரை பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோராக இருந்து வருகிறது.)
ஆப்கானிஸ்தான் அணிக்கு அபாரமாக பந்துவீசிய முஜீப் ரகுமான் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெடுகளை கைப்பற்றினார். பரூக்கி 4 ஓவர்களில் 13/2, நபி 3 ஓவர்களில் 12/2 என சிறப்பாக செயல்பட்டனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..
கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இப்படி திக்கித்திணறி வருவதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை அதிக அளவில் வறுத்தெடுக்கின்றனர்.
ஏனெனில் கடந்த வாரம் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடந்து முடிந்திருக்கிறது. அதில் பல அணிகள் 250 ரன்கள், 260 ரன்கள் என 20 ஓவர்களில் அடித்தது. பேட்ஸ்மேன்கள் சர்வசாதாரணமாக 100 ரன்கள் அடித்து வந்தனர். மேலும் பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் மிகக்குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து வந்தனர்.
பாகிஸ்தானில் இருக்கும் பிட்ச் எந்த வகையிலும் அதன் வீரர்களுக்கு உதவாது. நன்கு போட்டியை தீவிரமாக்கும் பிட்ச் தயார் செய்து அதில் விளையாடுங்கள் என்று பலரும் விமர்சித்தனர். இந்த விமர்சனங்களை முறையாக எடுத்துக் கொள்ளாமல், இந்தியர்கள் பொறாமையில் விமர்சிக்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீகையை விட பாகிஸ்தான் சூப்பர் லீக் வளர்ந்து வருவது பிடிக்காமல் இப்படி பேசுகின்றனர். அவர்களது பிரீமியர் லீகை விட எங்களது சூப்பர் லீக் மிகவும் சிறந்தது என்று பாகிஸ்தான் வீரர்களே சிலர் பேசினர்.
தற்போது வெளிநாட்டில் சிறப்பான பிட்சில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி திணறியதால், பாகிஸ்தானில் உள்ள மைதானம் குறித்து வந்த விமர்சனங்கள் சரி என்று நிரூபணம் ஆகியது. நெட்டிசன்கள் இதைப்பிடித்துக்கொண்டு விடாமல் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.