இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து டி20, ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவால் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியவில்லை. இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தொடரை இழந்தது. அவரால் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை இருப்பதால் நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரோகித் சர்மா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார், அப்போது ” ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் முதன்முறையாக டெஸ்ட் அணியில் தனது 30ஆவது வயதில்தான் அறிமுகமானார். அதிலிருந்து சுமார் 7 ஆண்டுகள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சினார். அவரை மக்கள் மிஸ்டர் கிரிக்கெட் என அன்புடன் அழைத்தனர். இது நமக்கெல்லாம் ஓர் நல்ல பாடம். எந்த வயதிலும் எந்த விளையாட்டையும் எப்போதும் தொடங்கலாம்” என்றார்.
Photo by Arjun Singh / Sportzpics for BCCI
மேலும் தொடர்ந்த 33 வயதான ரோகித் சர்மா ” கால்பந்து விளையாட்டு வீரர் ரொனால்டோ மிகப்பெரிய உதாரணம். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்தார். தன் தாயாரின் வருமானத்தில்தான் அவரது இள வயது வாழ்வு முழுவதும் சென்றது. இப்போது அவர் இருக்கும் உயரம் எத்தகையது. அதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதது ” என்றார்.
தனது சிக்ஸர்கள் குறித்து பேசிய ரோகித் சர்மா ” நான் கிறிஸ் கெயில் போல கட்டுமஸ்தான உடல் கொண்டவன் அல்ல. கேலரியை தாண்டி அடிப்பது மட்டுமே சிக்ஸர் அல்ல. துல்லியமாக பந்துகளை அடித்து அதை சரியாக பவுண்டரி கோட்டுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். அதிக தூரம் சிக்ஸர் அடித்தால் பேட்ஸ்மேன்களுக்கு 8 ரன்களோ எக்ஸ்ட்ரா ரன்களா கொடுக்கப்போகிறார்கள்?” எனக் கேலியாக தெரிவித்துள்ளார்.