இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுக்கும் விஹாரி
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை சத்தமில்லாமல் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹனுமா விஹாரி. இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கும் இந்த காக்கிநாடாகாரர். இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக மிரட்டியிருக்கிறார் ’பேட்’டால்.
கடந்த வருடம் ரஞ்சியில் தொடர் சதங்களை விளாச, அப்போது இவருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு நிச்சயம் என்று ஆருடம் சொன்னது, ஆந்திர, தெலுங்கானா பத்திரிகைகள். அவர்கள் கணிப்பு வீண் போகவில்லை. இந்திய ஏ அணியில் இடம் பிடித்தார் விஹாரி.
முதல்தர கிரிக்கெட்டில் விஹாரியின் ஆவரேஜ், உலகின் டாப் பேட்ஸ்மேன்களுக்கு கூட இல்லை என்கிறார்கள். அவரது ஆவரேஜ் 59.45. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆவரேஜ் 57.27-தான். இந்தியாவின் ரோகித் சர்மா, விராத் கோலி, புஜாரா ஆகியோரின் ஆவரேஜ் 54-தான். அவர்களையே ஆச்சரியபட வைத்திருக்கிறார் இந்த விறு விறு விஹாரி!
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த போட்டியில் அவர் 148 ரன்கள் விளாச, அந்த ரன்களோடு முதல் தர கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
’தெலங்கானா பிரிந்த பிறகு, இந்த மாநிலத்துக்கு போகவா, அந்த மாநிலத்துக்கு போகவா அப்படிங்கற குழப்பம் இருந்தது. அந்த மாற்றம்தான் என்னை உயர்த்தி இருக்கும். அணி மாறுவது ரிஸ்க்தான். சரியா விளையாடலைன்னா, அணி மாறுனதாலதான் இப்படியாச்சுன்னு சொல்வாங்க. அதனால கடுமையான பயிற்சிகள்ல ஈடுபட்டேன். அது எனக்கு கைகொடுத்தது. வழக்கமா செஞ்சுரி அடிச்சதும் நிறைய பேட்ஸ்மேன்கள் போதும்னு திருப்தி அடைஞ்சிருவாங்க. ஆனா, நான் இன்னும் ரன்கள் குவிக்கணும்னு நினைப்பேன். என் தனிப்பட்ட ஸ்கோரை விட, அணியின் வெற்றியின் முக்கியம். அதனால கடைசிவரை நிற்கணும்னு முடிவு பண்ணி ஆடுவேன்’ என்கிறார் விஹாரி.