ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி .
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியது. தற்போது 3வது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இருப்பினும் மறுமுனையில் நன்றாக விளையாடி வரும் கேப்டன் விராத் கோலி 23 ரன்கள் அடிக்கையில் ஒருநாள் அரங்கில் தனது 12,000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக 12 ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
குறைந்த இன்னிங்சில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:
- விராட் கோலி – 242 இன்னிங்ஸ்
- சச்சின் டெண்டுல்கர் – 300 இன்னிங்ஸ்
- ரிக்கி பாண்டிங் – 314 இன்னிங்ஸ்
- குமார் சங்ககரா – 336 இன்னிங்ஸ்
- சனத் ஜெயசூர்யா – 379 இன்னிங்ஸ்
- மகிளா ஜெயவர்தனே – 399 இன்னிங்ஸ்
3வது ஒருநாள் போட்டி:
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் சற்று தடுமாற்றம் கண்டு வருகிறது. துவக்க வீரர் ஷிகர் தவான் 27 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் முதன்முறையாக பேட்டிங் செய்த சுப்மன் கில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் 19 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி மிகவும் திணறியது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் இந்த போட்டியில் 11 பந்துகளில் பிடித்து வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, 26 ஓவர்களுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. கேப்டன் கோஹ்லி அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.