உலகக்கோப்பை முடிந்த உடன் வீரர்களின் ஒப்பந்தத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம்.
உலககோப்பையையில் மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அபாரமாக வென்று துவங்கியது. ஆனால், அதற்கு அடுத்ததாக, ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், எர்வின் லூயிஸ் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட, வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று ஆட்டம் கண்டது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் அரையிறுதி சுற்றுக்கு நுழையாமல் தொடரில் இருந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இதனால், வீரர்களின் ஒப்பந்தத்தில் பல மாற்றங்களை அந்த அணியின் வாரியம் கொண்டு வந்துள்ளது.
உலககோப்பையில் சிறப்பாக செயல்பட்ட நிகோலஸ் பூரான், ஃபெபியன் ஆலன், ஒஸானே தாமஸ் ஆகிய மூன்று வீரர்களும் இந்த புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த டேரன் பிராவோவுக்கு மூன்று வகை (ஒருநாள், டி20 & டெஸ்ட்( போட்டிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வகை போட்டி ஒப்பந்தம் மற்ற வீரர்களான ஹெட்மையர், கீமோ பால், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸப், கெமர் ரோச் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷு, மிகல் கம்மின்ஸ், ஆஷ்லி நர்ஸ், கிரான் பவல், ரேமான் ரீஃபர் ஆகியோர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் 2019-20 ஆண்டுக்கான ஒப்பந்தம்
மூன்று வகை (ஒருநாள், டி20 & டெஸ்ட்) கிரிக்கெட் போட்டிகள்: பிராவோ, ஹெட்மையர், கீமோ பால், ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோஸப், கெமர் ரோச்.
டெஸ்ட்: கிரைக் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பல், ராஸ்டன் சேஸ், ஷேன் டெளரிச், ஷெனான் கேப்ரியல், ஜோமல் வாரிகன்.
ஒருநாள் & டி20: ஃபெபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெட்ல், நிகோலஸ் பூரான், ரோவ்மன் பவல், ஒஸானே தாமஸ்.
இந்த ஒப்பந்தத்தில் கெயில் இல்லை. ஆதலால், இந்தாண்டுக்குள் இவர் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.