கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் 5 வீரர்களை அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று ஐபிஎல் நிர்வாகக் குழு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி திரும்பவுள்ளார்.
இன்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தலா ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் (இதில் 3 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். இரு வீரர்களை ரைட் டூ மேட்ச் முறையில் ஏலத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்). கடந்த இரு ஆண்டுகளாக புணே, குஜராத் அணிகளுக்காக விளையாடிய வீரர்களிலிருந்து சென்னை, ராஜஸ்தான் அணிகள் தங்களுக்கான வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
புணே, குஜராத் அணிகளில் விளையாடிய வீரர்களில் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஸ்மித், மெக்குல்லம், டுபிளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றார்கள். எனவே இந்த வீரர்களைத் தேர்வு செய்ய சென்னை, ராஜஸ்தான் அணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் தடைக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனால் இரு அணிகளும் மீண்டும் ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளன.
2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை ஆடுகளத்தில் காணவும் விரும்புவீர்கள். எல்லாவிதத்திலும் இவை நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஒரு பெரிய பட்டாளத்துடன் அடுத்த வருடம் மீண்டும் களத்தில் இறங்குவோம். ஐபிஎல் போட்டியில் இடம்பெறாததால் சிஎஸ்கேவின் மதிப்பு குறையவில்லை. தோனியினால்தான் சிஎஸ்கே இவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளது.